இது தொடர்பாக மதுரை உத்தங்குடியை சேர்ந்த ரமேஷ் மகாதேவ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ கடந்த 24.12.2020 அன்று பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் சம்பந்தமாக தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதில் பொதுத்துறை இணை இயக்குநராக இருந்த ரமண சரஸ்வதியை, அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமித்தும் ஆணையிடப்பட்டிருந்தது.
ஆனால், அறநிலையத்துறை சட்டமானது, இத்துறையில் இணை ஆணையராக பணியாற்றுபவரை மட்டுமே கூடுதல் ஆணையராக நியமிக்க முடியும் என்று கூறுகிறது. அப்படி இருக்கும்போது ரமண சரஸ்வதியை இந்த பதவிக்கு நியமித்ததில் உள்நோக்கம் உள்ளது. முழுக்க முழுக்க சட்டவிரோதமாக, தனிநபர் ஒருவருக்காக ஒரு பதவியை ஏற்படுத்தி இருப்பதை ஏற்க முடியாது.
எனவே, அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ரமண சரஸ்வதி நியமிக்கப்பட்டதை ரத்து செய்து, அறநிலையத்துறை சட்ட விதிமுறைகளை பின்பற்றி பதவி நியமனம் நடக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். அதைத் தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை குறித்து இந்து அறநிலையத்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சென்னையில் நிறுவன சட்ட முறையீட்டு தீர்ப்பாயம் தொடக்கம்!