மதுரை: நிவர் புயலின் காரணமாக மதுரை விமான நிலையத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓடுதளங்களில் மழை நீர் தேங்காத வண்ணம் கழிவு நீர் கால்வாய் குழாய்களில் பழுதுநீக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான ஓடுத்தளங்கள் மற்றும் நிறுத்துமிடங்களில் அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து புயலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், விமான நிலைய கட்டடத்தின் இலகுவான பாகங்களை வலுப்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சமிக்கை விளக்குகள் செயல்பாட்டு திறன் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் புயலின் தாக்கம் காரணமாக, இரண்டு தினங்களுக்கு இரண்டு இண்டிகோ விமானங்களை மதுரை விமான நிலையத்தில் பார்க்கிங் செய்வதகற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல், நிவர் புயல் காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னைக்குச் செல்லக்கூடிய விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், தூத்துக்குடி- பெங்களூரு இடையிலேயான விமான சேவை வழக்கம்போல இயங்கும் என தூத்துக்குடி விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நிவர் புயல்: மெட்ரோ ரயில் நாளை இயங்கும்