மதுரை-தேனி இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிவுற்ற நிலையில், மதுரை-ஆண்டிப்பட்டி ரயில் சேவைக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தடத்தில் ரயில் சேவை தொடங்க உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா தொற்று காரணமாக அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது படிப்படியாக பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில், இந்திய ரயில்வே நாடு முழுவதும் மேலும் 111 பயணிகள் ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில், திருச்சி - மானாமதுரை - திருச்சி (76807/76808), திருநெல்வேலி - நாகர்கோவில் - திருநெல்வேலி (56718/56717), செங்கோட்டை - மதுரை - செங்கோட்டை (56735/56732) ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மதுரை - ஆண்டிபட்டி - மதுரை ரயில் சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு அகல ரயில் பாதை பணிக்காக மதுரை தேனி ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது பணிகள் முடிந்த நிலையில், முதல் கட்டமாக மதுரை ஆண்டிப்பட்டி ரயில் சேவை தொடங்கப்படஉள்ளது.
இதையும் படிங்க: 19 மாதங்களுக்குப் பிறகு முன்பதிவில்லா ரயில் சேவை தொடக்கம்