ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகத்தில் டைமண்ட் பிரின்ஸஸ் என்ற சொகுசுக் கப்பல் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த 12 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் 2500 பயணிகளும் 1200 பணியாளர்களும் சிக்கியுள்ளனர். அவர்களில் ஐந்து தமிழர்கள் உள்பட 162 இந்தியர்களும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
பயணிகள் மற்றும் பணியாளர்களில் 650 பேர் மட்டுமே அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை மீட்கும் பணியை ஜப்பான் அரசு மேற்கொண்டுவருகிறது. கப்பலில் உள்ள 150-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நிலையில் கப்பலிலுள்ள இந்தியர்களை உடனடியாக இந்திய அரசு மீட்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்துள்ளது.
இந்நிலையில் நமது ஈடிவி பாரத்தின் மதுரை செய்தியாளருக்கு கப்பலில் பணியாற்றும் அன்பழகன் அனுப்பிய வீடியோவில், தன்னுடன் பணியாற்றும் திருச்சியைச் சேர்ந்த முத்து என்பவரின் மனைவி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தனது கணவரை மீட்க மனு அளித்துள்ளதாகவும் அதற்கு அவர் கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளை இந்திய விமானப்படையின் விமானம் இந்தியர்களை மீட்பதற்கு ஜப்பான் செல்லவிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே முத்துவின் மனைவி தேவி ப்ரியாவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, நாளை இந்திய விமானப்படையின் விமானம் ஜப்பான் செல்லவிருக்கிறது. மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவை இந்தியத் தூதரகத்தின் பார்வைக்கு அனுப்பிவிடுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்றார்.
மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவாதம் தங்களுக்குப் பெரும் நிம்மதி அளிப்பதாகவும், வைரஸ் பரவும் வேகம் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் இந்திய அரசு கப்பலில் சிக்கியவர்களை மீட்க விரைந்து செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:
கொரோனா வைரஸ் அறிகுறி - மதுரை இராசாசி மருத்துவமனையில் இருவர் அனுமதி!