மதுரை: காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் டிசம்பர் 27ஆம் தேதியன்று மற்ற மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் தமிழ்நாட்டிற்குள் நுழையாது என லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநில தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநில தலைவர் எம்.ஆர்.குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வேகக் கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒளிரும் பட்டை, ஜிபிஎஸ் கருவி பொருத்துவதில் குறிப்பிட்ட நிறுவனங்களில் வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை கைவிட வேண்டும், காவல்துறை ஆன்லைன் அபராத விதிப்பு, எந்த ஊரிலும் எஃப்சி செய்துகொள்ளலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தும் வகையில் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி காலை 6 மணி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம், இதில் நான்கரை லட்சம் லாரிகள், ஆட்டோ, வாடகை வாகன உரிமையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் முறையில் மத்திய அரசு கூறிய வழிகாட்டுதல்களை மாநில அரசு பின்பற்றவில்லை, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது தொடர்பாக 49 நிறுவனங்களில் வாங்கிக் கொள்ளலாம் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசு பின்பற்றவில்லை. காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் 27ஆம் தேதி முதல் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் தமிழ்நாட்டிற்குள் நுழையாது. எங்களின் வேலைநிறுத்தத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே ஜிபிஎஸ், வேக கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் பட்டை ஆகியவற்றை வாங்குவதற்கு போக்குவரத்து துறை அலுவலர்கள் நிர்பந்திக்கின்றனர். போக்குவரத்து துறையில் லஞ்சம் ஊழல் அதிகரித்துள்ளது, சில நாட்களுக்கு முன்பாகவே போக்குவரத்து துறையில் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் அது நிரூபணம் ஆகியுள்ளது.
வேலை நிறுத்தத்தில் குடிநீர், டீசல், பால் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான லாரிகள் மட்டும் இயங்கும், ஜிஎஸ்டி இருப்பதால் எந்த மாநிலத்தில் வேண்டுமானலும் கருவிகளை வாங்கிக் கொள்ளலாம் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். லாரி உரிமையாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றார்.
இதையும் படிங்க: பேருந்து மோதி பாமக நிர்வாகி உயிரிழப்பு - பேருந்தை தீயிட்டு கொளுத்திய ஊர் மக்கள்!