மதுரை: கட்டுமான தொழிலில் பல ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பிரபல கட்டுமான நிறுவனங்களான ஜெயபாரத்., அன்னை பாரத், கிளாட்வே கிரீன் சிட்டி, கிளாட்வே சிட்டி, ஆகிய நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை சுமார் 27 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது மற்றும் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலையடுத்து மதுரை ஜெயபாரத் கட்டுமான நிர்வாக பங்குதாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில், முதற்கட்டத்தில் ஒரு சில முக்கிய ஆவணங்கள் மட்டுமே சிக்கிய நிலையில், தற்போது கிளாட்வே சிட்டியில் உள்ள ஒரு இல்லத்தில் நேற்று முதல் பணம் என்னும் இயந்திரம், புதிதாக இரண்டு ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் கணினி வல்லுனர் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
ஆகையால், கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இருந்த போதிலும் மதுரையின் பெரிய கட்டுமான நிறுவனம் என்பதால் அந்த ரொக்க பணம் வேறு எதுவும் புதிய கட்டடங்கள் துவங்குவதற்காக? அல்லது இடங்கள் வாங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளதா.? என வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமான வரி சோதனை தொடங்கியதில் இருந்து தற்போது வரை வீட்டில் உள்ள அனைவரும் வருமானவரித்துறையினர் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும். ஏதேனும் ஆவணங்கள் எடுப்பதற்கோ, அல்லது மருத்துவ அவசரத்திற்காக மட்டுமே காவல்துறையினர் உதவியுடன் அவர்கள் வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
இந்த சோதனையானது இன்று மாலைக்குள் நிறைவடையும்., சோதனை முடியும் பட்சத்தில் முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் ரெய்டு!