மதுரையிலிருந்து சற்றேறக்குறைய 20 கி.மீ தொலைவில் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள சிற்றூர்தான் கல்லணை. திருநங்கை வினோத் என்ற சிந்தாமணி ஜல்லிக்கட்டின் மீதுள்ள தீவிர காதல் காரணமாக ராமு, கருப்பு மற்றும் லட்சுமி என மூன்று காளைகளை வளர்த்து, பல்வேறு வாடிவாசல்களில் காளையர்களை மிரள வைக்கிறார். திருநங்கை என்பதால் தான் பட்ட அவமானங்களையெல்லாம் காளைகளின் மீதான முதலீடாக்கி, தனக்குரிய சமூக கௌரவத்தை மீண்டும் ஈட்டி, இன்று தன்னுடைய ஊருக்குள்ளேயே தலைநிமிர்ந்து நடந்து செல்கிறார். புழுவெனத் தன்னை இகழ்ந்தவர் நடுவில் புலியென வாழ்ந்து கொண்டிருக்கிறார் சிந்தாமணி.
திருநங்கை சிந்தாமணி கூறுகையில், 'இந்த ஊர்லயே என்னை ரொம்ப கேவலமா பேசுனாங்க. ஒரு கட்டத்துக்குப் பிறகு தாங்க முடியாம மதுரைக்குப் போயி, என்னைய மாதிரி இருக்கற ஜெயசித்ரா என்ற ஆயாகிட்ட வேலைக்குச் சேர்ந்தேன். அவங்களோட ஆதரவுதான் என்னை இந்த அளவுக்கு வெற்றிபெற வச்சிருக்கு' என்று நெகிழ்கிறார். மேலும், 'வாடிவாசல்களில் காளைகள் அவிழ்க்கப்படும்போது, வீரத் தமிழச்சி, வீரத் தமிழர் என்று அடைமொழி வைத்து மைக்கில் அறிவிப்பார்கள். ஏன் நாங்கள் வீரத்திருநங்கைகளாக இருக்க முடியாதா..? வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டில் நாங்கள் வளர்க்கின்ற காளைகளும் சாதிக்காதா..? என்றெல்லாம் ஏங்கியதன் வெளிப்பாடுதான் என் ராமுவும், கருப்பனும்' என்கிறார்.
உயிர்களின் மேல் சிந்தாமணிக்கு இருக்கும் அலாதியான அன்பைப் பார்த்தால் வியப்பாக உள்ளது. ரோசி என்றழைத்தவுடன் துள்ளிக்குதித்து பாய்ந்தோடி வரும் நாய், சிந்தாமணியின் மீது தாவி ஏறி, முத்த மழை பொழிகிறது. நாய் மட்டுமன்றி, அவர் வளர்க்கின்ற காளைகளும் சிந்தாமணியின் சொல் பேச்சுக்கு உடனடியாக கட்டுப்படுகின்றன. பாலமேட்டில் தனது காளை வாடிவாசலில் இறங்கியபோது, அவ்வூர் மக்கள் தனக்கு அளித்த மரியாதையை பெரிதும் நன்றியுடன் நினைவுகூறுகிறார். தங்கக்காசு, சைக்கிள், குக்கர் போன்ற பரிசுப்பொருட்களை அள்ளி வழங்கியதையும், மேலூர் அருகேயுள்ள வெள்ளலூரில் தனது காளை களமிறங்கியவுடன், அவ்வூர் மக்கள் பரிசுப் பொருட்களை வழங்கியதோடு உணவு அளித்து கௌரவம் செய்ததையும் நெகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.
அலங்காநல்லூரைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஜெயராம் கூறுகையில், 'ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் இளைஞர்கள், பெண்கள் ஈடுபடுவதைக் காட்டிலும் சிந்தாமணி போன்ற திருநங்கைகளும் முன் வந்து செயல்புரிவது பெருமைக்குரியது. இவர்களை தமிழக அரசும், மதுரை மாவட்ட ஆட்சியரும் அங்கீகரிக்க வேண்டும். திருநங்கைகளின் காளைகளுக்கு முன்னுரிமை அளித்து வாடிவாசல்களில் அவிழ்க்க வேண்டும்' என்று கூறிய அவர், தங்கள் ஊரைச் சேர்ந்தவர் சிந்தாமணி என்பதில் தங்களுக்கு மிகவும் பெருமை எனவும் பதிவு செய்தார்.
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் அடங்காத ஆர்வத்தோடும் பெருமிதத்தோடும் இயங்கி வரும் சிந்தாமணி, திருநங்கை சமூகத்திற்கு ஆகப் பெரும் எடுத்துக்காட்டாய் திகழ்கிறார். தன்னைப் போலவே அனைத்து திருநங்கைகளும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் ஈடுபடுவதுடன், நாட்டு மாட்டினங்களைப் பாதுகாக்க முன் வர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கிறார். வீரத் தமிழர்கள், வீரத் தமிழச்சிகளுக்கு நடுவே வீரத் திருநங்கைகளும் களமிறங்கி ஜல்லிக்கட்டில் கால் பதித்திருப்பது உள்ளபடியே வரவேற்கத்தக்க முயற்சி. சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்கின்ற மூன்றாம் பாலினத்தவர்கள் எடுத்து வைத்துள்ள இந்த அடி அவர்களை நிச்சயம் உயர்த்தும் என்பதில் யாருக்குத்தான் ஐயமிருக்கும்.
இதையும் படிங்க: