தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றக்கூடிய நபர்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறையில் சரியான முறையைப் பின்பற்றாத காரணத்தால், பெரும்பாலும் பெண் தேர்வர்களே இங்கு தேர்வாகும் நிலை உள்ளது என மதுரையிலுள்ள ரேடியன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் ராஜபூபதி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
இடஒதுக்கீட்டு முறையில் குழப்பம்: ''பெண்களுக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீட்டை டிஎன்பிஎஸ்சி கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இதற்கு ஆண் தேர்வர்கள் யாரும் எதிர்க்கவில்லை. பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டை உள் ஒதுக்கீடாக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இதனை கிடைமட்ட ஒதுக்கீடு (Horizontal) மற்றும் செங்குத்து (Vertical) ஒதுக்கீடு முறையின் மூலமாகப் பணிகள் நிரப்பப்படுகின்றன.
ஆனால், பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டை கிடைமட்டமாகக் கணக்கிடாமல் செங்குத்தாகக் கணக்கிடுவது ஆண் தேர்வர்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக 100 பணிகளுக்காகப் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையில் பெண்களுக்கான 30% இடத்தை ஒதுக்கி வைத்துவிட்டே, பிற ஒதுக்கீடுகளைக் கணக்கீடு செய்கிறார்கள். எஞ்சியுள்ள 70% இடஒதுக்கீட்டில் ஆண்களும் பெண்களும் போட்டியிடுகின்றனர்.
இடஒதுக்கீட்டு முறை: செங்குத்து முறை இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 26.5%; மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20%, பழங்குடியினர் 7.5%, தாழ்த்தப்பட்டோர் 15% என கணக்கிட்டு வழங்கப்படுகிறது. இதில் கிடைமட்ட முறையில் பெண்களுக்கான 30% மற்றும் தமிழ்வழியில் பயின்றோருக்கு 20% என கணக்கிடப்படுகிறது. இது உள்ஒதுக்கீட்டு முறையாகும்.
காரணம், கிடைமட்ட முறையில் பகிர்ந்தளிக்கப்படுபவர்கள் அனைவரும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஒதுக்கீட்டு முறையிலும் வருவர். ஆகையால், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை கிடைமட்டமாக கணக்கிடாமல், செங்குத்து முறையில் கணக்கிட்ட காரணத்தால், தற்போது நடைபெற்று முடிந்த குரூப் 1 தேர்வில் 66 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் 57 பேர் பெண்கள். 9 பேர் மட்டுமே ஆண்கள். இந்தத் தேர்வில் 87% பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வைப் பொறுத்தவரை முதல்நிலைத் தேர்விலேயே ஆண்கள் வடிகட்டப்பட்டு, பெண்கள்தான் பெரும்பாலும் தேர்வு செய்யப்பட்டார்கள். அதற்குப்பிறகு முதன்மைத்தேர்வில் இயல்பாக பெண்கள் அதிகமாகவே தேர்வாகிவிட்டார்கள். இதற்காக ஆண்கள் சரியாகத்தயாராகவில்லை என்பது பொருளல்ல.
இயல்பாகவே நமக்குத்தெரியும் பெண்கள் நன்றாகப் பயிலக்கூடியவர்கள்தான். 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளே கூட இதனைப் பிரதிபலிக்கின்றன. ஐஏஎஸ் போன்ற தேர்வுகளில் 25% தான் பெண்கள் தேர்வு பெறுகிறார்கள். 75% ஆண்களாக உள்ளனர். ஐஐடி போன்ற இடங்களில் பெண்கள் வெறும் 10% தான். தமிழ்நாட்டில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமல் செய்யப்பட்டுள்ளதால் அதிகமாகப் பெண்கள் தேர்வாகின்றனர். ஆனால், பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்..?: பொதுவாக எந்த மாதிரியான அளவுகோலைக்கொண்டு தேர்வர்கள் தேர்வு செய்யப்பட வேண்டுமோ, அவ்வாறு தேர்வு செய்யப்படவேண்டும். தேர்வானவர்களில் எடுத்துக்காட்டாக 100 பேர் என்றால், இவர்களில் 30% பேர் பெண்கள் இருக்கிறார்களா என்பதைப்பார்க்க வேண்டும்.
இதில் இயல்பாகவே அவர்கள் வந்துவிடுவார்கள். அவ்வாறு 30% வந்த பிறகு சிறப்பு ஒதுக்கீட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இது கிடைமட்ட ஒதுக்கீட்டு முறையின் அளவுகோலாகும். ஆனால், இந்த முறைக்கு மாறாக தேர்வு செய்யப்படுகின்ற காரணத்தால், பெண்கள் அதிகளவிலும், ஆண்கள் மிகக்குறைவாகவும் தேர்வு பெறுகின்ற நிலை ஏற்படுகிறது.
ஆண்கள் எண்ணிக்கை குறைகிறது: இடஒதுக்கீட்டு முறையின் குழப்பான கணக்கீடு காரணமாக ஆண்கள் அரசு வேலைகளுக்குச்செல்லும் எண்ணிக்கை பெருமளவில் குறையத்தொடங்கியுள்ளது. இதனால் பிற்காலத்தில் சமூகச் சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. நமது சமூகத்தைப் பொறுத்தவரை பெண்கள் வேலைகளுக்குச்செல்கிறார்களோ இல்லையோ ஆண்கள் கண்டிப்பாக வேலைக்குச்சென்றே ஆக வேண்டும் என்ற பொதுப்பார்வை உள்ளது.
இதுபோன்ற இடஒதுக்கீட்டு முறையை ராஜஸ்தான் மாநில பணியாளர் தேர்வாணையம் செய்துள்ளது. பெண்களுக்கான இடஒதுக்கீட்டை கிடைமட்ட முறையில் வழங்க நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனைப் பின்பற்றி டிஎன்பிஎஸ்சி இனி வருங்காலங்களில் இடஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு வழங்குகின்ற 69% இடஒதுக்கீட்டு பல்வேறு வகையிலும் பலரை உறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் இடஒதுக்கீட்டு முறை அவசியம் வேண்டும். ஆனால், உள்ஒதுக்கீட்டை கிடைமட்ட முறையில் கணக்கிட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழங்குவதே முக்கியம்.
ஆணும் பெண்ணும் சமம்: ஆணும் பெண்ணும் சமம். ஆகையால், பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது மிகவும் அவசியம். அதனை யார் எதிர்த்தாலும் தவறு. ஆனால், தருகின்ற இடஒதுக்கீட்டு முறையை சரியான அளவில் கிடைமட்டத்தில் பங்கீடு செய்தால், யாருக்கும் பாதகமின்றி அமையும் என்பதே எனது கருத்து.
இதனை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். ஏற்கெனவே பாதிக்கப்பட்ட தேர்வர்கள் முதலமைச்சருக்கும், தேர்வாணையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளனர். சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். பெண்கள் 50% ஆண்கள் 50% என்றுகூட தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து அறிவித்தால் நாங்கள் வரவேற்கத் தயாராக உள்ளோம்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்ட கடந்த பத்தாண்டுகளாகவே இந்தக் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அப்போதிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து தற்போது 87% என்ற அளவிற்கு வளர்ந்துவிட்ட காரணத்தால், தற்போது ஆண் தேர்வர்கள் குரல் எழுப்பத்தொடங்கியுள்ளனர்' என்கிறார்.
சமூக நீதியின் மண்ணாகக் கருதப்படுகின்ற தமிழ்நாட்டில் தற்போது பின்பற்றப்படுகின்ற இடஒதுக்கீட்டு முறையில் உள்ள குழப்பத்தை தமிழ்நாடு அரசு நீக்கி, நியாயமான முறையைப்பின்பற்ற வேண்டும் என போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: VideoLeak:பட்டியலின மாணவனை அதிக கட்டணம் செலுத்தக் கூறி பேரம் பேசிய தாளாளர்