ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ராஜு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மாவட்ட, தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதர நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள். சிகிச்சை அளிக்கும் மருத்துவர் நோயாளியை பரிசோதித்த பின்னர் காலை, மதியம், இரவு மற்றும் உணவுக்கு முன், பின் உட்கொள்க என அறிவுறுத்தி மருந்துகளை வழங்குகின்றனர்.
ஆனால், மருந்தாளுனர்கள் அவை அனைத்தையும் உரிய குறிப்புகளின்றி ஒரே உறையில் போட்டு வழங்குகின்றனர். இதனால் கல்வியறிவு அற்றவர்கள் முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்ள இயலாத நிலை உருவாகியுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளாவிட்டால் நோய் குணமாக வாய்ப்பில்லை. ஆகவே, இது தொடர்பாக நடவடிக்கை கோரிய போது, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர், அச்சிட்ட கவர்களுக்காக மட்டும் ஆண்டொன்றுக்கு 6 லட்ச ரூபாயை செலவிட வேண்டியிருக்கும் எனத் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு உரிய மருந்துகளை வழங்கி, ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வது அரசின் கடமை. ஆகவே, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளை நேரம் மற்றும் உணவுக்கு முன்பா? பின்பா? என்பதைக் குறிப்பிடும் வகையில் தனித்தனி உறைகளில் வழங்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சரவணன் அமர்வு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளை நேரம் மற்றும் உணவுக்கு முன்பா? பின்பா? என்பதைக் குறிப்பிடும் வகையில் ஏன் வழங்குவதில்லை? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க, அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.