மதுரை: ஆசிரியர் பணி இட மாறுதல் கலந்தாய்வு தொடர்பான வழக்குகள், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'லஞ்சம் கொடுப்பதன் அடிப்படையில் மட்டுமே அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வில் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
மேலும், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கோ அல்லது பணியிடத்திற்கோ இடமாறுதல் பெறுவது தொடர்பாக ஆசிரியர்கள் ரூ.10 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டியது உள்ளது. இது போன்றவைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை' என குற்றச்சாட்டுக் கூறி வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி உத்தரவில், 'இதே போன்ற பல வழக்குகளிலும் ஆசிரியர் பணியிட மாற்றம் நேர்மையான முறையில் நடைபெறவில்லை எனத்தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர்.
பணியிடமாற்ற என்ன IPL ஏலமா?
இதுபோன்ற விஷயங்களில் IPL கிரிக்கெட் வீரர்களைப் போல, ஆசிரியர் பணியிடமாற்றத்திற்கு, லட்சக்கணக்கில் ஏலம் விடப்படுகிறதா என்று கேள்வியெழுப்பினர். நீதித்துறை மற்றும் கல்வித்துறையின் நலன் கருதி, ஆசிரியர் பணியிடமாற்றத்திற்கு லஞ்சம் பெறப்படுகிறதா என்பது குறித்து, அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
ஊழல் தடுப்பு பிரிவு விளக்கவேண்டும்
லஞ்சமாக ரூ.10 லட்சம் கொடுத்து பணியிட மாறுதல் பெற்றவர்கள், எந்த நிலையில் கல்வி கற்பிப்பார்கள்? குழந்தைகளுக்கு, எந்த வகையான ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பார்கள்?' என்று கேள்வியை முன்வைத்தனர்.
அத்துடன், 'லஞ்சம் கொடுத்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறும் நிலை சந்தேகத்திற்கு இடமின்றி கவலைக்குரியது. இந்த நிலை தொடர்ந்தால், அது பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும்' என்று நீதிபதி வேதனைத் தெரிவித்தார்.
இதுபோன்ற குற்றங்கள், தென் மாவட்டங்களில் மிகவும் சாதாரணமாக நடப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் நீதிமன்றம் தாமாக முன் வந்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறை இயக்குநரை, எதிர் மனுதாரராக சேர்க்கிறது என்றார்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு (மார்ச் 4ஆம் தேதிக்கு) ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: திருச்சி மாநகராட்சி துணை மேயர் வேட்பாளர் திவ்யா - திமுக தலைமை