மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் ஆண்டுதோறும் தை மாதம் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் பிரபலமானவை. கடந்தாண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திமுடித்தனர்.
அதேபோல் இந்தாண்டும் இன்று (ஜனவரி 15) அவனியாபுரத்திலும், நாளை (ஜனவரி 16 ) பாலமேட்டிலும், நாளை மறுநாள் (ஜனவரி 17) அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு கமிட்டிகள் மனு
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி அமைப்பது தொடர்பாக இந்த ஆண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கமிட்டிகள் தங்களை சேர்க்க வேண்டும், அனைத்து தரப்பினருக்கும் குழுவில் இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல மனுக்களை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்தனர்.
இதேபோல் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது வாடிவாசல் பின் பகுதியில் எந்தக் கவனமும் செலுத்துவதில்லை. காளைகள், காளைகளின் உரிமையாளருக்குப் பாதுகாப்பு வசதிகளும் அடிப்படை வசதிகளும் செய்துகொடுப்பதில்லை. காளைகள் அவிழ்த்துவிடுவதில் பாகுபாடு காட்டப்படுகிறது போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
உயர் நீதிமன்ற உத்தரவு
நேற்று முன்தினம் இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர், மதுரை மாவட்ட ஆட்சியர், தென்மண்டல காவல் துறை தலைவர், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஆகியோரைக் கொண்ட குழு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் என்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி சீமான் தலைமையிலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலும் நடைபெறும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மருத்துவ வசதிகளும் செய்து தர வேண்டும் என்றும், காளைகள் வரும் பகுதி, மருத்துவ பரிசோதனை பகுதி, வாடிவாசல் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் காவல் துறையின் பாதுகாப்பின் கீழ் இருக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு தொடர்பாக உதவுவதே ஆலோசனைக் குழுவின் பணி என்றும் பொதுமக்கள் யாரும் தங்களது நன்கொடைகளை ஆலோசனை குழுவிடம் வழங்கக் கூடாது என்றும் ஜல்லிக்கட்டின்போது காளைகள் அதன் உரிமையாளர்கள் என யாருக்கும் முதல் மரியாதை கொடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
அதுமட்டுமல்லாமல் போட்டியை சுமுகமாகவும் அமைதியாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகளை ஆலோசனைக்குழுவினர் மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைவரும் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் களத்தில் எவ்விதமான பேனர்களும் கட்சிக் கொடிகளும் இருக்கக் கூடாது என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான அறிக்கைகள் காவல் துறை ஆணையர், ஜல்லிக்கட்டு அமைப்புக் குழுவின் சார்பில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் மாடுபிடி வீரர்கள் அவனியாபுரத்தில் 610 பேரும், பாலமேட்டில் 936 பேரும், அலங்காநல்லூரில் 800 பேரும் பதிவுசெய்துள்ளனர். தற்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க:
போயஸ் தோட்ட இல்லத்தில் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்