மதுரை: சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர், பீரான்பட்டி ஊராட்சியில் அருள்மிகு பாலதண்டாயுதபானி திருக்கோயிலின் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பதற்கும், வைக்கப்பட்ட சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இதே போன்று மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தன்மையைப் பொறுத்து, தொடர்புடைய காவல் துறை அலுவலர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டார்.
நிபந்தனைகளின் விவரம் வருமாறு:
விநாயகர் ஊர்வலத்தின் போது பங்கேற்பாளர்கள் எவராலும் எந்தவிதமான ஆபாச நடனமோ, பேச்சோ இருக்கக்கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிட்டு நடனம் மற்றும் பாடல்கள் எதுவும் இசைக்கக்கூடாது.
எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது மதத் தலைவருக்கும் ஆதரவாக ஃப்ளெக்ஸ் போர்டுகள் அமைக்கக் கூடாது. மதம் அல்லது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது பங்கேற்பவர்கள் எந்தவிதமான போதைப்பொருட்களையோ மதுபானங்களையோ உட்கொள்ளக்கூடாது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், மனுதாரர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் பொறுப்பாவார்கள்.
விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுத்து, அத்தகைய திருவிழாவை நிறுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலருக்கு சுதந்திரம் உண்டு.
இந்த நிபந்தனைகளுடன் உரிய அனுமதி வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மதுரை மல்லி கடும் விலையேற்றம்...