விருதுநகர் கோட்ட தபால் துறை ஓய்வூதியர்கள் சங்க செயலர் செல்லப்பா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "மத்திய அரசு ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையில் தபால் துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கான ஊதியத்திலும், ஓய்வூதியத்திலும் குளறுபடிகள் இருந்தன.
இதை நீக்கி தபால் துறையில் பணிபுரிந்து, 2006ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கான, பண பலன்களை மறு நிர்ணயம் செய்து, நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்க நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தபால் துறை அமல்படுத்த ஆணையிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் கே, ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை மூன்று மாதத்தில் அமல்படுத்தி, தபால் துறை கணக்கு மற்றும் நிதிப்பிரிவு பொது மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.