மதுரை: பாலியல் விவகாரத்துக்கு உள்ளான பத்மா சேஷாத்ரி பள்ளி விசாரணையில் மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் தலையிடுவது தேவையற்றது என மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபேன் சிறப்பு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "பத்ம சேஷாத்ரி பள்ளி குறித்து முழுமையான ஆய்வு நடத்த வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உண்டு. மனித உரிமை, பெண்கள் உரிமை, குழந்தைகள் உரிமை ஆணையங்கள் சார்ந்தும் அதனை விசாரிக்க முடியாது. 1960ஆம் ஆண்டு பால பவன் என்ற பெயரில் அப்பகுதியில் மேட்டுக்குடி பெண்கள் ஒருங்கிணைந்து ஏழைகளுக்கு கல்வி வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இதற்காக அன்றைய தமிழக முதல்வர் காமராஜர், இலவசமாக நிலங்களை வழங்கினார்.
படிப்படியாக இப்பள்ளியை ஒய்ஜிபி குடும்பம் கைப்பற்றி அதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் அவர்களின் குடும்பத்தினர், அவர்களது ஆதரவு நண்பர்கள் மூலமாக நடத்தத் தொடங்கினார்கள். முழுமையாக அவர்களது தனிப்பட்ட பள்ளி போல் அதனை நடத்தி வருகின்றனர்.
இது ஏழை எளிய மாணவர்களுக்காக வழங்கப்பட்ட பொதுச்சொத்து. ஆனால் யார் கையில் அது சென்று இருக்கிறது என்பது குறித்த பெரிய சர்ச்சை தற்போதும் உள்ளது. ஆகையால் அதனை தற்போது பேச வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதுபோன்ற பொதுச் சொத்துக்கள் யாரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தாலும் மதம், சாதி என எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் உடனடியாக அரசு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொதுச் சொத்துக்கள் அனைத்தும் எந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்டதோ அதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த வேண்டுகோளை நான் முன் வைக்கிறேன். பத்ம சேஷாத்ரி பள்ளி என்பதற்காக இந்த குற்றச்சாட்டை நான் வைக்கவில்லை. இந்த சம்பவத்தை பயன்படுத்தி ஆக்கிரமிக்கப்பட்ட பொது சொத்துக்கள் அனைத்தும் உடனடியாக அதன் உண்மையான நோக்கத்திற்கு பயன்பட வேண்டும் என்பதே இங்கு முக்கியம்.
கிருஸ்தவ நிறுவனங்களாக இருந்தாலும் கூட, ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட பொது சொத்தாக இருந்தாலும், அவற்றைக் கைப்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நான் வலியுறுத்தும் முக்கியமான கோரிக்கை. இதையெல்லாம் கேள்வி கேட்க வேண்டிய நேரம் தற்போது வந்துவிட்டது என்பதன் தொடக்கம் தான் பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம்.
கடந்த 2013ஆம் ஆண்டு அந்தப் பள்ளியில் நீச்சல் குளத்தில் ரஞ்சன் என்ற மாணவர் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதற்காக பள்ளி சார்பில் போடப்பட்ட ஜாமீன் மனு ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி முன்பாக விசாரணைக்கு வரும்போது, நீச்சல் குளத்திற்கு அனுமதியே இல்லாமல் எப்படி கட்டினார்கள் என்று கேள்வியை எழுப்பினார். இதில் வேதனைக்குரிய ஒரு விஷயம் என்னவென்றால் அக்குறிப்பிட்ட நீச்சல் குளம் விஷயத்தில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
யாரோ ஒருவர் செய்த தப்புக்கு அறக்கட்டளை உறுப்பினர்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். யாரோ ஒரு ஓட்டுனர் பள்ளி பேருந்தை விபத்து ஏற்படுத்தியதற்காக தாம்பரம் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார். அதே போன்று சத்துணவு அமைப்பாளர் செய்த தவறின் காரணமாக கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து போனார்கள். அந்த பள்ளியின் தாளாளர் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்தார். இதில் கல்வித்துறை சார்ந்த அலுவலர்களும் குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்கு உள்ளானார்கள்.
அதேபோன்று பத்மா சேஷாத்திரி பள்ளியில் அதன் மூன்றாவது மாடி கட்டிடம் இடிந்து விழுந்த வழக்கில் கூட அது முறையான அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆகவே பத்ம சேஷாத்ரி பள்ளியைப் பொறுத்தவரை ஆணையங்கள் விசாரிக்க கூடிய விஷயமாக இருக்கக்கூடாது. இதனை விசாரிப்பதற்கு என்று சிறப்பு குழு ஒன்றை நியமிக்க வேண்டும். சிறப்பு குழு வெவ்வேறு வல்லுனர்கள் அதிகாரிகளை உறுப்பினர்களை கொண்டதாக உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இதனை அந்த ஒரு பள்ளிக்கான வேண்டுகோளாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், பொது சொத்துக்கள் தனிநபர் சொத்துக்களாக மாற்றப்பட்டுள்ள அனைத்து சம்பவங்களையும், இதில் ஒருங்கிணைத்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த வழக்கில் தற்போது உயர் காவல்துறை அதிகாரிகள் விசாரித்துக் கொண்டிருக்கும் போது மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் ஒதுங்கி இருக்க வேண்டிய தார்மீக கடமை அவர்களுக்கு உண்டு.
மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்தில் தற்போது தலைவராக இருப்பவர் கடந்த அதிமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட அதிமுக கட்சிக்காரரான சரஸ்வதி ரங்கராஜன் ஆவார். எந்தக் கட்சியும் அமைப்பும் சாராமல் இருப்பதை நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட சரஸ்வதி ரங்கராஜன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராவார். ஆட்சி மாறும் போது தார்மீக பொறுப்பேற்று அவர் விலகி இருக்க வேண்டும். கட்சி உறுப்பினர் இல்லை என்று இவர் கூறினாலும் அடிப்படையில் அதிமுகவின் மேடைப் பேச்சாளர் ஆவார்.
மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்தின் தலைவராக இருப்பவருக்கு மிகப்பெரும் பொறுப்புகள் உண்டு. குறிப்பாக போக்சோ சட்டம் 2012ன் கீழ் பிரிவு 44ல் குறிப்பிட்டுள்ளவாறு மத்திய குழந்தைகள் உரிமை ஆணையத்தோடு இணைந்து மாநிலம் முழுவதும் கண்காணிக்க வேண்டிய கடமை உண்டு. இது வேறு எந்த ஆணையத்திற்கும் இல்லாத சிறப்பு வாய்ந்த பிரிவாகும்.
ஆனால் அது குறித்து மாநில குழந்தைகள் ஆணையத்தின் ஆண்டறிக்கையில் எங்கும் வெளிப்படவில்லை. இந்த ஆணையத்தின் சார்பாக இதுவரை என்ன கண்காணிப்பு என்ன பரிந்துரைகள் மாநிலம் முழுவதும் நடந்துள்ளன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆகையால் பத்ம சேஷாத்ரி விவகாரத்தில் இந்த ஆணையத்தின் தலையீடு தேவையற்றது அவசியமற்றது உள்நோக்கம் கொண்டது.
பத்மா சேஷாத்திரி பள்ளியின் மறைந்த முன்னாள் நிர்வாகி ஒய்ஜிபி மறைந்த முன்னாள் முத்லமைச்சர் ஜெயலலிதாவுக்கு எத்தனை நெருக்கமானவர் என்பது உலகம் அறிந்த உண்மை. அப்போதைய தமிழ்நாடு அரசு அமைத்த அனைத்து கல்வி குழுவிலும் மதுவந்தியின் பாட்டியும் உறுப்பினராக இருந்தார். கல்வி உரிமை குறித்த சட்டங்களிலும் மாநில குழந்தைகள் ஆணையத்தில் தலையீடு அத்தனை சிறப்பாக இருந்ததில்லை என்பது கடந்த கால வரலாறு.
இந்த விஷயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் சமூகநலத் துறை அமைச்சரும் மிக ஆழமாகப் பரிசீலனை செய்ய வேண்டும் தேவைப்பட்டால் எங்களைப் போன்ற மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கருத்துக்களையும் பெற வேண்டும். அதற்குரிய ஆழமான தரவுகளையும், சான்றுகளையும் நாங்கள் வழங்க தயாராக இருக்கிறோம். தற்போதுள்ள மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்தை மேலும் வலுவுள்ளதாக அதிகாரம் மிக்கதாக மாற்ற வேண்டும்.
அதேபோன்று பத்ம சேஷாத்ரி விவகாரத்தில் குறிப்பிட்ட சாதியை தாக்கி காயப்படுத்துவதும் ஏற்கத்தக்கதல்ல. இது குறித்து சமூக வலைதளங்களில் வரக்கூடிய விமர்சனங்களை நாங்கள் ஏற்கவில்லை. சாதியோ, மதமோ சார்ந்த விஷயம் கிடையாது. இது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சனை என்ற அளவில் இதனை அணுக வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு, பங்கேற்பு, அரவணைப்பு சம்பந்தப்பட்டது. அந்தப் பள்ளியில் பயின்ற ஒரு ஆசிரியர் தவறு செய்தார் என்பதற்காக அனைத்து ஆசிரியர்களையும் அதே கண்ணோட்டத்தோடு பார்ப்பது மிக மிக பிழையானது.
அதேபோன்று பெண் ஆசிரியர்கள் மாணவியருக்கும், ஆண் ஆசிரியர்கள் மாணவருக்கும் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பது தேவையற்ற ஒன்று. இருபாலரும் கலந்து பயிலும் போது தான் உண்மையான கல்வி முறை வெளிப்படும். நாமக்கல் பகுதியில் இருக்கக்கூடிய பள்ளிகளில் இதுபோன்ற பாகுபாடு இருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இவையெல்லாம் தவறான முன்னுதாரணமாகும்.
தவறு செய்கின்ற ஆசிரியர்களை தண்டிப்பதற்கு அரசு கடுமையான உத்தரவை (GO: 121) பயன்படுத்தி அந்த ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தண்டிப்பதற்கு இடம் உள்ளது. ஆனால் இதுவரை அதனை எந்த அரசும் பயன்படுத்தவில்லை என்பதுதான் வேதனைக்குரியது. அக்குறிப்பிட்ட ஆசிரியர் மீண்டும் பணி செய்ய முடியாத அளவுக்கு அவரது சான்றிதழை முடக்கம் செய்யலாம். இதன் மூலம் அவர் வேறு எங்கும் பணி செய்ய முடியாது என்ற நிலைமையை உருவாக்க முடியும். இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்" என்றார்.
பத்ம சேஷாத்ரி பள்ளி மற்றும் அதன் அறக்கட்டளையை கைப்பற்றி தனிப்பட்ட பள்ளி போல் ஒய்ஜிபி குடும்பம் நடத்தி வருவதாக மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபேன் தெரிவித்துள்ளார்