புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், கறம்பக்குடி தாலுகாவில் உள்ள விட்டல்தாஸ் குடியிருப்பில் சுமார் 50 குடியிருப்புகள் வாடகைக்கு விடப்பட்டு மக்கள் வசித்துவருகின்றனர். இந்த குடியிருப்பில் 25 வருடங்களாக மக்கள் வசித்துவருகின்றனர். இங்குள்ள வீடுகளிலிருந்து வரும் கழிவு நீர் பேரூராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சேமிப்பு தொட்டியில் விடப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொட்டி திறந்த நிலையில் இருந்தபோது கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று இரண்டு சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக உள்ளே விழுந்து சிறுவர்கள் உயிரிழந்தனர். இதேபோல் கறம்பக்குடி பேரூராட்சியில் சந்தைப்பேட்டை மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளிலும் செப்டிக் டேங்க் மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது.
இதுதொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே செப்டிக் டேங்க்கில் விழுந்து உயிரிழந்த இரு சிறுவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி, செப்டிக் டேங்க் மூடாமல் இருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் புதுக்கோட்டை மாவட்டம், உள்ள அனைத்து செப்டிக் டேங்க்குகளை மூட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கறம்பகுடி தாலுகாவில் உள்ள அனைத்து செப்டிக் டேங்க்குகள் மூடப்பட்டன என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் இரு சிறுவர்கள் உயிரிழப்புக்கு காரணமாக கவன குறைவாக இருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க...பேரறிவாளன் விடுதலை விவகாரம்: முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்