கேரளா மாநிலம் உன்னியாலைச் சேர்ந்த ரஷீத் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணைக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது, என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இந்த வழக்கில் எனது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும், உறுதியாக ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
தேனி மாவட்ட நீதிமன்றத்தில் பிணைக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிணை அளிக்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன். ஆகவே பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வழக்கறிஞர், “ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், அவர்களின் தந்தை பிணையில் உள்ளனர். ஒன்றரை ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வருகிறது. மனுதாரர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் . அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளனர். எனவே பிணை வழங்க வேண்டும்” என்றார்.
பின்னர் இதற்கு சிபிசிஐடி காவல் துறையினர் கூறுகையில், முக்கிய குற்றவாளிகளான கிருஷ்ணா சிங் உள்ளிட்டோர் தற்போது வரை பிடிபட வில்லை. எனவே, இவருக்கு பிணை வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி, தற்போது வரை இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கிருஷ்ணா சிங் உள்ளிட்ட நபர்களை எப்போது கைது செய்வீர்கள்? ரஷீத்திடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்கள், கைப்பற்ற பட்ட ஆவணங்கள் குறித்தும் சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 10ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க...2016 சட்டப்பேரவைத் தேர்தல்: வெற்றிகளும், தோல்விகளும்