திருச்சியைச் சேர்ந்த நித்திய சௌமியா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "வீடற்ற ஏழை முதியவர்கள் பலர் சாலை ஓரங்களிலும், கோவில் மண்டபங்களிலும், பூங்காக்கள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் எவ்விதமான அடிப்படை, சுகாதார வசதி, மருத்துவ வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக பொது சுகாதார சேவை மையங்கள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இதுவரை ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்டோரின் நலனுக்காக குறிப்பிட்ட திட்டங்கள் எதுவும் பொது சுகாதார சேவை துறையிடம் இல்லை.
தங்களுக்கு தேவையானவற்றை தங்களால் செய்து கொள்ள இயலாத முதுமை நிலையில், நோய்வாய்பட்டுப் படுகையில் அவர்களின் நிலை மேலும் கவலைக்கிடமான ஒன்றாக உள்ளது. சென்னை மருத்துவமனைகளில் வீடற்ற மற்றும் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கான சிறப்பு மறுவாழ்வு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியது. தமிழ்நாட்டில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்த முயற்சி முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை எடுத்த பின்பு வேறு இடங்களுக்கு செல்ல வழியில்லாத முதியவர்கள் இந்த சிறப்பு வார்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையை பின்பற்றி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் அதேபோன்று சிறப்பு மறுவாழ்வு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மதுரை மாவட்டங்களில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் இதுபோல கைவிடப்பட்ட ஆதரவற்றவர்கள் உள்ளனர். ஆகவே தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்டோருக்கான மறுவாழ்வு வார்டுகளை அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஆனந்திஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர், சமூக நலத்துறை செயலர், மருத்துவக்கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க...M-இல் தொடங்கும் சர்வாதிகாரிகளின் பெயர் - மோடியை விமர்சித்த ராகுல்!