மதுரை: திருமங்கலம் - செங்கோட்டை நான்கு வழிச்சாலை பணிகளை மாற்று வழியில் செயல்படுத்த கோரி அமைதியான வழியில் போராடியவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுத்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு விசாரணை நேற்று (அக்.14) உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.
தென்காசி மாவட்டம் ஆத்துவழி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுனிதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எனது கணவர் ஜெயராமன் பொறியியல் சார்ந்த தொழில் செய்து வருகிறார். இவர் திருமங்கலம் ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை பகுதியில் செயல்படுத்த உள்ள நான்கு வழி சாலை திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என்றும் தற்போது செயல்படுத்தக்கூடிய வழியில் செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கூறி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி என் கணவர் கிராம தலையாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, 19ஆம் தேதி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்து தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது சட்ட விரோதமானது. எனது கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் நிஷா பானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை செய்த நீதிபதிகள் இந்த வழக்கில் குண்டர் தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவர் சிறையில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் அரசு இழப்பீடு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். அடிப்படை ஆதாரங்களை வைத்து பார்க்கும்போது, இவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, இதுகுறித்து விரிவான அறிக்கை காவல்துறை தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் நவ.7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 7.5% இடஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டிப்பது குறித்து மறு ஆய்வு செய்யலாம்!