மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "சீர்மரபு பழங்குடி சமூகங்களின் கூட்டமைப்பு சார்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குரிய 20 விழுக்காடு இடஒதுக்கீட்டினை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமல்படுத்த வேண்டும். உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் 2000 முதல் 2021ஆம் ஆண்டு வரை அனைத்து சாதியினரும் இட ஒதுக்கீட்டால் கல்வி மற்றும் அரசுப் பணிகளில் பெற்றவை குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் இன்று (ஏப். 10) காலை 9 மணி முதல் 5 மணிவரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தோம்.
ஆனால், அதிகாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு அவசர வழக்காக எடுக்கப்பட்டு, நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
கட்டுப்பாடுகள் விதிப்பு: இந்த வழக்கில் அரசு தரப்பில், "மதுரை மாநகரில் சித்திரைப் பெருவிழாவினை முன்னிட்டு காவலர்கள் பற்றாக்குறை உள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க இயலாது. மேலும், பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யாமல், ஒலிப்பெருக்கியின் சத்தம் அதிகம் இல்லாமல், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தால் அனுமதி வழங்கலாம்" என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், "அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, 'மதுரை மாநகர காவல் ஆணையர், சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அரசு தரப்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட்டு நடத்தப்பட வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.