மதுரை: சூர்யா நகர் அருகே காளை மாடு ஒன்று இடது பின்னங்கால் முறிவு ஏற்பட்டு சாலையில் சுற்றித் திரிவதாக மதுரை மண்டல கால்நடைத் துறை இயக்குநருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அரசு கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று சூர்யா நகர் பகுதியில் சுற்றித்திரிந்த காளை மாட்டை மீட்டு அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். பின்னங்காலில் ஏற்பட்ட கால் முறிவு காரணமாக காளை மாட்டால் தரையில் ஊன்ற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இதனால் தல்லாகுளம் கால்நடை முதன்மை மருத்துவர் வைரசாமி தலைமையிலான குழுவினர், தென் மாவட்டத்திலேயே முதன்முறையாக காளை மாட்டிற்கு செயற்கைக் கால் பொருத்த முடிவு செய்தனர். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது சிந்தெட்டிக்கிலான செயற்கை கால் செய்து, காளை மாட்டிற்கு பொருத்தப்பட்டுள்ளது.
மனிதரைப் போல கால்நடைகளுக்கும் முதல் முறையாக செயற்கை கால் பொருத்தப்பட்டது. சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவக் குழுவினரை மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார். தற்போது இந்தக் காளையை, விலங்கு நல ஆர்வலர் தீபக் என்பவர் பராமரித்துவருகிறார்.