தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதைக்காக மருந்துகளை பேருந்தில் கடத்தப்படுவது குறித்து சிறப்பு தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அம்மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதில், உத்தமபாளையத்தைச் சேர்ந்த முகமதுமீரான் (22) மற்றும் மாணிக்கம் (19) ஆகியோரை விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் வசமிருந்த மருந்துகள் சம்பந்தமாக விசாரணை செய்ததில், மருத்துவத்துறையில் வரைமுறைப்படுத்தப்பட்டு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு ஊக்க மருந்தை தவறான வழியில் போதைக்காக ஊசி மூலமாக பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், அதிக லாபத்திற்கு இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்ததாகவும், தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த தங்கேஸ்வரன் மற்றும் காமாட்சிபுரத்தை சேர்ந்த சரவணக்குமார் ஆகியோர் மூலம் அறிமுகமான, திருச்சி ஜோனத்தன்மார்க் என்பவரிடமிருந்து வாங்கியதாகவும், மேற்கண்ட மருந்துகளை உரிய அனுமதியின்றி கடத்தி வந்ததாக தெரியவந்துள்ளது.
இதனால் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்ததில், மேற்படி ஊக்க மருந்தை வலைதளம் மூலம் திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த ஜோனத்தன்மார்க் (30) என்பவரிடம் கொள்முதல் செய்வதும், கொள்முதல் செய்வதற்கான பணத்தை ‘Google Pay’ மூலம் செலுத்தி வந்ததும், பணம் செலுத்திய பின்பு ஜோனத்தன்மார்க் பேருந்தில் உறவினர்களுக்கு மருந்து அனுப்புவதாக கூறி வாடிக்கையாளரிடம் ஊக்க மருந்தை உரிய அனுமதியின்றி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து முகமதுமீரான், மாணிக்கம், தங்கேஸ்வரன், சரவணக்குமார் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 10ml கொண்ட 11 ஊக்கமருந்து பாட்டில்கள், நான்கு ஊசிகள், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தன. பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
மேற்கண்ட விசாரணையில், ஊக்க மருந்தை போதைக்காக வியாபாரம் செய்து வந்த முக்கிய நபரும் பொறியியல் (EEE) பட்டதாரியுமான ஜோனத்தன்மார்க் என்பவர் ‘Fizzli Pharma Pvt Ltd.’ என்ற பெயரில் திருச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் மதுரையில் ஒரு மருந்து நிறுவனத்திடமிருந்து "Green" என்ற ரகசிய குறியீட்டின் மூலம் ஓர் ஊக்க மருந்தையும், சென்னையில் ஒரு மருந்து நிறுவனத்திடமிருந்து "Pink" என்ற ரகசிய குறியீட்டின் மூலம் ஓர் ஊக்க மருந்தையும், பூனேயில் ஒரு மருந்து நிறுவனத்திடமிருந்து "Orange” என்ற ரகசிய குறியீட்டின் மூலம் ஒர் ஊக்க மருந்தையும், போதைக்காக விற்பனை செய்ய மொத்த கொள்முதல் செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
பின்னர், கொள்முதல் செய்யப்படும் மருந்தினை தமிழ்நாட்டில் சென்னை, ஒசூர், தேனி, கோயம்புத்தூர், திருப்பூர், சிவகங்கை, கரூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமில்லாமல் ,கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு, திருவனந்தபுரம் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் பாண்டிச்சேரியிலும் மொத்த விற்பனை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
அவரிடமிருந்து போதைக்காக விற்பனை செய்ய வைத்திருந்த வரையறைக்குட்படுத்தப்பட்ட மருந்து பாட்டில்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜோனத்தன்மார்க்கிடம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த வினோதினி என்பவர் உதவியாளராக பணிபுரிந்து, அலுவலக நிர்வாகத்தினை பார்த்து வந்துள்ளார். அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோனத்தன்மார்க்கின் 3 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் ரூபேஸ் குமார் மீனா, மேற்பார்வையில் தனிப்படை குழுவினரான சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் A.பாபு பிரசாந்த், போடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் N.சுரேஷ், தேனி தனி பிரிவு ஆய்வாளர் முருகானந்தம், சின்னமனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் மேற்கண்ட குற்ற செயல்களை கண்டுபிடித்ததோடு குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் தென் மண்டல காவல் துறைத் தலைவர் அஸ்ரா கார்க் பாராட்டியதுடன், “மக்களின் உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடிய மருந்துகளை உரிய அனுமதியின்றி சட்டத்திற்க்கு புறம்பாக தவறான வழியில், சமுதாயத்தை சீர்குலைக்கும் எண்ணத்தோடு லாப நோக்க அடிப்படையில் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி தவறான வழியில் அழைத்துச்செல்லும் இதுபோன்ற சமூகவிரோத செயல்கள் செய்பவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.
மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் உரிய அனுமதியின்றி சட்டத்திற்க்கு புறம்பாக மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: நகைகளை உருக்க நவீன மெஷின்...வங்கி கொள்ளை கும்பலின் சிசிடிவி பதிவு...