மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை அளித்தார். அதில், "2002ஆம் ஆண்டு முதல் வனத்துறையில், வனப்பகுதி பாதுகாவலராக பணியாற்றி வருகிறேன். இதையடுத்து 2010ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட அரசாணையில், 10 வருடங்களாக பணியாற்றியவரை தற்காலிக வனப்பகுதி பாதுகாவலராக, நிரந்தர வனப்பகுதி காவலராக நியமிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில் 10 வருடம் வனப்பகுதியில், வனப்பகுதி பாதுகாவலராக பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், இதை நிறைவேற்றும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்திரவிட்டது.
இதையடுத்து காலியாக உள்ள 564 வனப்பகுதி காவலர் பணிக்காக, கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி அன்று வனத்துறை சார்பாக விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி வனப்பகுதி காவலர்களை நியமனம் செய்தால், எங்கள் பணி பாதிக்கப்படும், நீதிமன்ற உத்தரவின்படி 10 வருடம் பணியாற்றிய வனப்பகுதி பாதுகாவலராக பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
மேலும், 2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி அன்று, அரசு வெளியிட்ட வனப்பகுதி காவலர்களுக்கான காலி இடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட விளம்பரத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.