மதுரை: விருதுநகரைச் சேர்ந்த ஜெயராணி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "உப்பத்தூர் பகுதியில், நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு செயல்பட்டு வந்த சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் எனது மகன் படுகாயமடைந்தார்.
ஏறத்தாழ 50 விழுக்காட்டிற்கு அதிகமான தீக்காயங்களோடு, மிகவும் சிரமப்பட்டு வருகிறார். என் குடும்பத்தின் மாத வருமானம் ரூ.8000 இருக்கும் நிலையில், எனது மகனின் சிகிச்சை செலவையும் பார்த்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துவது சிரமமாக உள்ளது.
ஆகவே, ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்குவதோடு சட்டவிரோத பட்டாசு ஆலையை நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவினை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "இந்த வழக்கைப் பொறுத்தவரை முதலமைச்சர் நிவாரண நிதி பெறுவதற்கான வரம்பிற்குள் இல்லாத காரணத்தால், அதிலிருந்து நிவாரணம் வழங்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சட்டவிரோத பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. அதில் காயம் அடைபவர்களுக்கு அரசு நிவாரணத்தை வழங்கி வருகிறது. சட்டவிரோத பட்டாசு ஆலைகள் முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
நாம் அனைவரும் குறுகிய கால நினைவுகள் என்னும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு முறையும் பெரிய அளவிலான விபத்து நிகழ்வதும் பின்னர் நிவாரணங்கள் வழங்கப்படுவதும், அதைத் தொடர்ந்து அவை மறக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மனுதாரரின் மகன் மிகுந்த பாதிப்புகளோடு சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார். அரசின் நிதி உதவி என்பது இயற்கைச் சீற்றங்கள், எதிர்பாராத இழப்புகள், விபத்துகள், உயர் கல்வி என தேவைக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டவை.
ஆகவே மனுதாரருக்கு ஐந்து லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணமாக வழங்க தமிழ்நாடு தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்படுகிறது.
இதன் உத்தரவின் நகல் கிடைக்கப் பெற்றதிலிருந்து ஆறு வாரங்களுக்குள்ளாக மனுதாரருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.