மதுரை நாராயணபுரம் பகுதியில் தனியார் வணிக வளாகம் ஒன்று உள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, பேக்கரி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் கிளை நிறுவனங்கள் இந்த வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த வணிக வளாகத்தின் தரைதளத்தில் உள்ள மின்மாற்றியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. புகை வருவதைக் கண்ட வணிக நிறுவனத்தில் பணியாற்றிய வங்கி ஊழியர்கள், பேக்கரி ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த பாதுகாவலர்கள் துரிதமாக செயல்பட்டு, வங்கியில் வைத்திருந்த தீத்தடுப்பு கருவி மூலம் தீயை விரைந்து அணைத்தனர். ஊரடங்கு காரணமாக குறைந்த அளவு ஊழியர்கள் மட்டும் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. வங்கி தொடர்பான முக்கிய ஆவணங்களும் தப்பித்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மின்மாற்றியில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:என்எல்சியில் பாய்லர் வெடித்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு!