சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயா, இளையான்குடி முத்து கண்ணன், தேவகோட்டை செல்லப்பன் ஆகியோர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், "ராமநாதபுரத்தைச் சேர்ந்த நீதிமணியின் மனைவி மேனகா, ஆனந்த் ஆகியோர் இணைந்து பில்லியன் பின்டக் என்ற நிதி நிறுவனம் நடத்தினர்.
தொடக்கத்தில் இவர்களிடம், அதிக வட்டிக்கு ஆசைபட்டு ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் லட்சகணக்கில் முதலீடு செய்தனர்.
ஒரு லட்சம் வழங்கினால் மாதம் 5 ஆயிரம் ரூபாய் வட்டி தருகிறோம் என்று உறுதிக் கூறினர்.
அதன்படி, முதலீடு செய்தவர்களுக்கு வட்டி வழங்கி வந்தனர். இதனிடையே, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 300 கோடி அளவிற்கு ஆசிரியர்கள், பொதுமக்கள் லட்சக்கணக்கில் வைப்புத்தொகை செலுத்தி உள்ளனர்.
தற்போது, கரோனா ஊரடங்கு தொடங்கிய காலத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்திற்கு வட்டி வழங்கவில்லை.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் காவல் துறையினர் நிதிநிறுனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நீதிமணி ஆனந்த், மேனகா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், நீதிமணி, ஆனந்த் ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்தனர். ஆனால், இதுவரை மேனகாவை கைது செய்யவில்லை. மேலும் இவர்களிடம் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு தற்போது பணம் தேவைப்படுகிறது.
இதற்கு எந்த பதிலும் இல்லை. இவர்கள் இதுபோன்று சென்னை , கோவையில் பல்வேறு பெயர்களில் நிதிநிறுவனம் நடத்திவருகின்றனர். முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு, பண்ணை வீடுகள், பங்களாக்கள் வாங்கியுள்ளனர். மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் முதலீடு செய்துள்ளனர்.
மனுதாரர்களாகிய, நாங்கள் மூவரும் சேர்ந்து மொத்தம் 68 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளோம். வழக்கு குறித்த விசாரணை மிகவும் மெதுவாக செல்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்தில் உள்ளனர்.
நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர்களுக்கு காவல் துறை அலுவலர்கள் பலரும் உதவியாக உள்ளனர் எனத் தெரிகிறது. இந்த மோசடி வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணைக்கு மாற்றி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது . அப்போது, இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. யிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 22 ஆம் தேதி ஒத்திவைத்தார்.