குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் யானைகள் சாலையை கடக்க மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பதாகவும், இதனை யானைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பு பட்டியலிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்ரமணியன், சதீஷ்குமார் ஆகியோர், இந்த வழக்கை யானைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பாக மார்ச் 25ஆம் தேதி பட்டியலிட வேண்டும். இதுதொடர்பான நிலை அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
சில நாள்களுக்கு முன்பு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்க பணிகளால் குட்டி யானை கடந்து செல்ல முடியாமல் மலையில் இருந்து உருண்டுவிழும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் நந்தகோபாலன் பாலம் பகுதியில் தண்ணீர் தேவைக்காக யானைகள் சாலையை கடந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாகன விபத்து இழப்பீடுகளை விரைந்து வழங்குக - உயர் நீதிமன்றம் உத்தரவு