தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த நாகராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "சங்கரன்கோவில் வழியாக திருநெல்வேலி செல்லும் பிரதான சாலையை ஒட்டி அருவம் சூடிய விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் அருகே, சர்வே எண் 888/3-இல், 32 ஹெக்டேர் பரப்பளவில் மின் மயானம் அமைக்க, நகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த விநாயகர் கோயில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கற்கோயிலாகும்.
இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் இங்கு ஓய்வு எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலை சுற்றிலும் 200 ஏக்கர் ஈரமான நஞ்சை நிலங்கள் உள்ளன.
இந்த நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. அத்துடன் கோயிலின் கட்டடத்தை ஒட்டிய நிலம் காலியாக இருப்பதால், அறுவடை காலத்தில் இந்த இடத்தை கிராம மக்கள் களஞ்சியமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோயிலை ஒட்டி மயானம் அமைப்பது, பழங்கால கோயிலையும் அதன் முக்கியத்துவத்தையும் பாதிக்கும்படியாக உள்ளது. இந்த முடிவு பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கும், சாகுபடிப் பணிகள் செய்யும் விவசாயிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.
எனவே அருவம் சூடிய விநாயகர் கோயிலை தொல்லியல் துறை ஆய்வு செய்து பழங்கால சின்னமாக அறிவிக்க வேண்டும். இந்த கோயில் அருகே மின் மயானம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்ததது.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று (ஏப். 5) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் வழக்கு தொடர்புடைய இடத்தை ஆய்வு செய்து, 6 மாதத்திற்குள் உரிய முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: குத்தகை நிலுவையை செலுத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவு