மதுரையில் உள்ள மதுரை மத்தி சட்டப்பேரவைத் தொகுதி, அதிமுக கூட்டணியில் உள்ள பசும்பொன் தேவர் கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் சார்பாக ஜோதி முத்துராமலிங்கம் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார். இவர் நேற்று (மார்ச்.17) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது சில ஆவணங்களை பூர்த்தி செய்ய வேண்டியிருந்ததால் தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்கு எதிரே உள்ள அறையில் அவர் அமர வைக்கப்பட்டார். அங்கு ஆவணங்களை பூர்த்தி செய்த பின் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டுச் சென்றார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு மாற்று வேட்பாளராக தீபக் குமார் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவிலும் ஆவணங்களை பூர்த்தி செய்ய வேண்டியிருந்ததால் அவரும் அதே அறையில் அமர வைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து சில கட்சிகளின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதே தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அப்போது காத்திருப்போர் அறைக்கு அருகில் உள்ள கணினி பிரிவுக்குச் சென்ற மாற்று வேட்பாளர் தீபக் குமார், அங்கு அலுவலக ஊழியர்கள் பயன்படுத்தும் கணினி முன்பாக அமர்ந்து கணினியை பயன்படுத்திக் கொண்டிருந்தார். இதை அங்குள்ள இதர ஊழியர்களும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாற்று வேட்பாளர் தீபக் குமார் தேர்தல் அலுவலகக் கணினியை பயன்படுத்துவதைக் கண்ட இதர கட்சிகளின் வேட்பாளர்கள், தேர்தல் அலுவலகத்தில் உள்ள கணினியை பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை எனவும், தேவையான ஆவணங்களை அவர்கள் வெளியில் இருந்தே கொண்டு வரவேண்டும் எனவும், இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்று புகார் தெரிவித்தனர்.
மேலும், ஆளும் கட்சியான அதிமுக கூட்டணிக் கட்சியின் வேட்பாளர் என்பதால் அலுவலர்களின் துணையுடன் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், இந்த விதிமுறை மீறல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்தப் புகார் தொடர்பாக மத்தியத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.கோட்டூர் சாமியிடம் கேட்டபோது, "வேட்பாளர்கள் காத்திருப்பு அறையை மட்டுமே பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வேட்பாளர் அலுவலகக் கணினியை பயன்படுத்தியது தொடர்பான புகார் எனது கவனத்துக்கு வரவில்லை. இருந்தாலும் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: தேர்தலை முன்னிட்டு 21,289 ரவுடிகள் மீது நடவடிக்கை: காவல் துறை தகவல்