மதுரை: மதுரை மாட்டுத்தாவணி அருகே ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மாவட்டம் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. நாள்தோறும் 50 டன்னுக்கும் அதிகமான அளவில் மொத்தமாகவும், சில்லரையாகவும் இங்கே பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த மலர் சந்தையிலிருந்து வெளிமாவட்டங்கள் மட்டுமன்றி, வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறன. மதுரை மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மலர் சந்தையில் பூக்களின் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக மதுரை மல்லிகை ரூ.2000, பிச்சிப்பூ ரூ.800, முல்லைப் பூ ரூ.1300, அரளிப்பூ ரூ. 350 செவ்வந்தி ரூ.200, கனகாம்பரம் ரூ.2000, செண்டு பூ ரூ.100, சம்பங்கி ரூ.180, பட்டன் ரோஸ் ரூ. 180 என விற்பனையாகின்றன.
மழையின் காரணமாக விற்பனை மந்தமாக இருந்தாலும், நாளை விலை கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண பொங்கலன்று ராகுல் மதுரை வருகை