மதுரை மாநகராட்சி மற்றும் மடீஸியா சார்பில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி பேசுகையில்:-'மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறும் கரோனா நோயாளியுடன் ஒருவர் மட்டுமே தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை. எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்ள வரவில்லை.
மாவட்டங்களில் அனைத்து இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை. தனியார் மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது.
திமுக பதவியேற்ற 21 நாட்களில் கரோனாவை ஒழிக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சி காலத்தில் மதுரை மாவட்டத்தில் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 100 கோடியில் திருமங்கலம் தொகுதியில் மட்டுமே 90 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அரசியல் செய்ய இது நேரமில்லை, எதிர்க்கட்சிகள் ஆலோசனைகள் வழங்க வேண்டும்' எனக் கூறினார்.
இதையும் படிங்க:'பருத்திப்பால் வியாபாரியான எம்.காம்., பட்டதாரி' - 3 தலைமுறையின் பாரம்பரியம்