மதுரை: அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் பயிற்சி முகாம் குன்றத்தூரில் உள்ள அம்மா கோயிலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சரும் மதுரை அதிமுக புறநகர் மேற்கு மாவட்டக் கழக செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: ”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை மேற்கொண்டார். அதற்கு அலுவலர்கள் அதிகமாக செலவாகும். ஆதலால் மடிக்கணினிக்கு பதிலாக டேப்லட் வழங்கலாம் என்று கூறிய போது, மாணவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என உறுதியாக நின்றார். இத்திட்டத்தில் இதுவரை 65 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டாவை இலவசமாக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதன்மூலம் 10 லட்சம் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெற்றார்கள். இந்த இரண்டு திட்டங்களையும் தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசிடம் இக்கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.
அதேபோல் ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை ஜெயலலிதா வழங்கினார். அதேபோல் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தனி அமைப்பு உருவாக்கி அதன்மூலம் காய்கறி, சமையல் பொருள்கள் உள்ளிட்ட பொருள்களின் விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டார்.
கடந்த தேர்தலின்போது திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். ஆட்சிக்கு வந்து முதல் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது 50 நாள்கள் ஆகியும் எந்த முடிவும் அறிவிக்கவில்லை. இதனால் மாணவர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். இந்தக் குழப்பத்தை போக்க முழுமையாக முறையான அறிவிப்பை அரசு கொடுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறினார்கள். ஆனால் அதற்கு தற்போது வேறு காரணம் கூறி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இடமே இல்லை. ஆனால் இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று திமுகவினர் கூறினார்கள். அதேபோல் 2006 திமுக ஆட்சிகாலத்தில் இலவச கலர் டிவி கொடுக்கப்பட்டது. அதில் கரண்டே இல்லாத வீடுகளுக்கு கலர் டிவி கொடுக்கப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்களுக்கு பயன்படும் வகையில் திட்டங்களை வழங்க வேண்டும். தற்போது கணினி புரட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியால் தான் இது சாத்தியமானது” என்றார்.