மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள அம்மா திடலில் அதிமுக-பாஜக கூட்டணியின் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசி அவர், "மதுரை மாவட்டம் தமிழ் மண்ணின் பண்பாட்டு தொட்டிலாகவும், மொழி வளர்ச்சிக்காக சங்கம் வளர்த்த மண்ணாகவும் திகழ்கிறது. இங்கு, சௌராஷ்டிரா, தெலுங்கு மொழி பேசும் மக்களும் அதிகமாக உள்ளனர். இது ஒருமைப்பாட்டை நினைவூட்டுகிறது.
எம்ஜிஆர் நடித்த மதுரை வீரன் திரைப்படத்தையும், அவருக்காக பின்னணி பாடல் பாடிய புகழ்பெற்ற டி.எம். சௌந்தரராஜனையும் மறக்க முடியுமா, அது மதுரையின் அரசியல் குறித்து விவரிக்கும் படமாக உள்ளது. அப்பேர்பட்ட மதுரை அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் அடிப்படை கட்டமைப்பு, நீர்ப்பாசனம், முதலீடு ஆகிய மூன்றிலும் அதிக கவனம் கொடுத்து ஆளும் அதிமுக கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாடு ரயில்வே திட்டங்களில், 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 238 விழுக்காடு நிதி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
வீட்டுக்கு வீடு குழாய்கள் இணைப்பு திட்டம் மூலம், தமிழ்நாட்டில் 16 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு 7 ஜவுளி பூங்காக்கள் கொண்டுவரப்படுள்ளன" எனத்தெரிவித்தார். அதையடுத்துப் பேசிய அவர், "காங்கிரஸ்-திமுக தலைமையின்போது தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு என்று காங்கிரஸ் கட்சியினர் சுட்டுக்காட்டிப் பேசி உள்ளனர். அவர்கள், தமிழர்களின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் மதிப்பதாக பொய் பரப்புரை செய்கின்றனர். அவர்களை தமிழ்நாடு மக்கள் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அதையடுத்துப் பேசி முதலமைச்சர் பழனிசாமி, "இந்தியாவில் கரோனா தடுப்பூசி ஒரே ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ஊக்கமளித்த பிரதமர் மோடியை உலக நாடுகள் வியப்பாக பார்க்கின்றனர். தமிழ்நாடு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டின் கடந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டில், 3 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதனால் வேலை வாய்ப்பு பெருமளவு அதிகரிக்கும். முறையான திட்டமிடுதலால் தமிழ்நாடு தற்போது மின் மிகை மாநிலமாக திகழ்கிறது.
திமுக ஒரு குடும்பக்கட்சி, அவர்களது வாரிசுகள் மட்டுமே அதிகாரத்தில் இருக்க முடியும். ஆனால் அதிமுகவில் அப்படியல்ல" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பிரதமரே வாங்க; எங்களுக்கு ஆதரவு தாங்க!' - திமுக வேட்பாளர்கள் பரப்புரை