இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், "தமிழ்நாட்டில் 12 சித்தா கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகள், 20 தனியார் மருத்துவமனைகள், 300 கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன. கரோனா காலத்தில் சித்தா மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு பலர் குணமடைந்தனர். குறிப்பாக கபசுரக் குடிநீர் பொடியை இந்திய மருத்துவ ஆணையமே அங்கீகரித்துள்ளது.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு முதல் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள், சித்த வைத்தியம் செய்யும் நோயாளிகளுக்கு காப்பீடு செய்ய அனுமதிக்கப்பட்டும், பல காப்பீட்டு நிறுவனங்கள் சித்த வைத்தியம் செய்யும் நோயாளிகளுக்கு முறையாக காப்பீடு தொகை வழங்குவதில்லை.
தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள காப்பீட்டில், சித்தா சம்பந்தமான வைத்தியங்கள் செய்யும் போது உபயோகப்படுத்தும் படியாகவே வழங்கப்பட்டுள்ளது. எனவே, சித்த மருத்துவத்தில் அனைத்து வித சிகிச்சைகளுக்கும் காப்பீடு தொகை வழங்க அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சித்த மருத்துவத்திற்கு அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பது, அரசு கொள்கை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு என்பதால், இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க: 2018இல் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய ஹெச். ராஜா: காவல் துறைக்கு கடும் எச்சரிக்கை