மதுரை: தமிழ்நாட்டில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை துறவிகள், ஜீயர்கள் ஆதீனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மதுரையில் பேரூர் அதீனம் பேட்டியளித்தார். மதுரையில் துறவிகள் மாநாடு பழங்காந்தம் சந்திப்பில் நடைபெறுகிறது.
முன்னதாக மதுரை தனியார் மண்டபத்தில் விசுவ இந்து பரிஷத் சார்பில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள மசூதிகள், தேவாலயங்கள் போல இந்துக்களின் கோவில்களை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து துறவிகள், ஜீயர்கள், அதீனங்களின் கட்டுப்பாட்டில் விட வேண்டும்.
தமிழ்நாட்டில் மதமாற்ற தடை சட்டம்: இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு 93 சதவீதம் இந்துக்கள் இருந்தனர். ஆனால் தற்போது 80 சதவீதம் இந்துக்கள் மட்டுமே இருக்கின்றனர். இதற்கு மதமாற்றம்தான் காரணம் இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் மதமாற்றத் தடை சட்டம் அமலில் உள்ளது. அதேபோல் தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை அமல் செய்ய வேண்டும்.
கபாலீஸ்வரர் கோவிலை இடித்துத்தான் சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டதாக கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது பற்றி தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். திருக்குறள், திருஞானசம்பந்தர், ஆண்டாள் போன்றவர்களின் கருத்துக்கள் இயேசு பேசிய கருத்துக்களாக பரப்பப்பட்டு வருகின்றன.
சமய கல்லூரிக்கு முன்னுரிமை: தமிழ்நாட்டில் சமயக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து அறநிலையத் துறை கோவில்களிலும் அதனை நடைமுறை செய்ய வேண்டும். நதி யாத்திரை நடத்தி நீர் நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது அதனை தத்தெடுத்து கோவில்களில் உள்ள கோ மடங்களில் பாதுகாக்க வேண்டும்.
கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மரக் கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார். அகில இந்திய துறவிகள் மாநாடு வரும் (ஜூன்) 11,12இல் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: 'இதுவும் திருவிளையாடல்...பட்டினப்பிரவேசம் குறித்து உலகிற்குத் தெரியவே இந்தத் தடை சம்பவம்'