கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ஏ.கே. போஸ் முதல்முறையாகவும், 2016இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜன்செல்லப்பா இரண்டாவது முறையும் என அதிமுக இங்கே வெற்றிக்கனியை பறித்துள்ளது.
மேற்கண்ட இருவருமே முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 6-ஆம்தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத்தேர்தலில் அதிமுக சார்பாக மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் ராஜன் செல்லப்பாவும் மதுரை வடக்கு தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணனும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அகமுடையார் இளைஞர் பேரவை சார்பில் அதிமுக தலைமைக்கு கோரிக்கை வைத்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் "அதிமுக தலைமையே! மதுரை மாநகர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதியில் அதிகம் வசிக்கும் முக்குலத்தோர் அகமுடையார் சமுதாயத்தைப் புறக்கணிக்க கூடாது, முக்குலத்தோர் அகமுடையார் அதிமுக நிர்வாகிகளை வேட்பாளராகத் தேர்வு செய்ய வேண்டும்”, "இறக்குமதி வேட்பாளரை விட மாட்டோம்" என்பன போன்ற வாசகங்களும் அடங்கியுள்ளன.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையிலும், இது போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்திலும், மதுரை மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.‘
இதையும் படிங்க: காந்தியின் உருவச்சிலை அமைக்க அளித்த அனுமதியை ரத்துசெய்ய கோரிய வழக்கு தள்ளுபடி