பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன், ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். வரி கொடுக்கமாட்டேன் என்று மறுத்து அவர் செய்த புரட்சி, இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளிகளுள் ஒன்றாகும்.
கிழக்கிந்தியக் கம்பெனியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள் பின்னாளில் ஆட்சியைக் கைப்பற்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆளத் தொடங்கினர். அப்போது தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் பல்வேறு பாளையக்காரர்கள் ஆற்காடு நவாபுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தனர்.
ஆற்காடு நவாபை தங்களின் ஏவலாளாக மாற்றிய ஆங்கிலேயர், பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமையைப் பெற்றனர். இதில் பல்வேறு பாளையக்காரர்கள் அடிபணிந்தனர். சிலர் மறுத்தனர்.
பணிய மறுத்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரி கேட்பதற்காக முதன் முதலில் சென்றவர் ஆங்கிலேய அலுவலர் ஆலன்துரை. அவருடைய கல்லறை மதுரை காக்காத்தோப்புத் தெருவிற்கு அருகேயுள்ள வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் இன்றைக்கும் நினைவுச் சின்னமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இங்குள்ள ஐரோப்பிய, அமெரிக்கர்கள் கல்லறைத் தோட்டம் தனியார் அமைப்பு ஒன்றின் வாயிலாகப் பராமரிக்கப்பட்டுவருகிறது. கடந்த 1770ஆம் ஆண்டு மதுரையில் வாழ்ந்த ஆங்கிலேயர்களுக்காக இந்தக் கல்லறை உருவாக்கப்பட்டு, பல நூறு ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டுவருகிறது.
பிறகு பாஞ்சாலங்குறிச்சிக்கோட்டை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு, வீரபாண்டியக் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர். அப்போது புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமானால் கட்டபொம்மன் காட்டிக்கொடுக்கப்பட்டு ஆங்கிலேயர்களால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
இறுதியாக 1799ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி ஆளுநர் பானர்மேன், கட்டபொம்மனைத் தூக்கிலிடுமாறு கட்டளையிட்டார். அந்தக் கட்டளையை நிறைவேற்றும் அலுவலராக தூக்கிலிடக் கொடி அசைத்தவர்தான் இந்த ஆலன்துரை. மதுரையில் பணியாற்றியபோது மரணமடைந்த ஆலன்துரையின் கல்லறை, மதுரையின் இதயப்பகுதியில் இன்றைக்கும் பல்வேறு ஆங்கிலேய, அமெரிக்கர்களின் கல்லறைகளுக்கு நடுவே 200 ஆண்டுகளுக்கும் மேல் வரலாற்று சான்றாய் நிற்கிறது.
கட்டபொம்மன் விஜயரகுநாத தொண்டைமானால் காட்டிக் கொடுக்கப்பட்டு, அவரைக் கைது செய்து கயத்தாறுக்கு கொண்டு செல்லும் வழியில் மதுரையைக் கடந்து சென்றபோது, கட்டபொம்மன் மீனாட்சி அம்மன் கோயிலின் தெற்குக் கோபுரத்தைப் பார்த்து நின்று வணங்கிச் சென்றார் என்றும், அதன் நினைவாகவே அதே இடத்தில் பெரியார் பேருந்து நிலையம் அருகே அவருக்கு சிலை அமைக்கப்பட்டது என்றும் செவி வழிச் செய்தி உள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்டபொம்மன் சிலை 1960ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி அன்றைய மாவட்ட ஆட்சியர் விஸ்வநாதனால் திறந்துவைக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயிலின் தெற்கு கோபுரத்தைப் பார்த்தவாறு கட்டபொம்மனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...உழுதலில் மாற்றத்தை ஏற்படுத்திய விவசாயி!