மதுரை: 175 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தம் செய்யும் பகுதியினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்துவைத்தார்.
மீனாட்சி பேருந்து நிலையம் பெயர் மாற்றம் - 'பெரியார்'
மதுரை மாநகரின் மையப் பகுதியில் 1921ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையம், மத்தியப் பேருந்து நிலையம், மீனாட்சிப் பேருந்து நிலையம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டுவந்தன. 1971ஆம் ஆண்டுமுதல் பெரியார் பேருந்து நிலையமாக மாற்றப்பட்டது.
பின்னர், மதுரையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அண்ணா பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது. அதற்குப் பிறகு மாட்டுத்தாவணி, பழங்காநத்தம், ஆரப்பாளையத்தில் தனித்தனியாகப் புறநகர்ப் பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் நவீன வசதிகளுடன் பெரியார் பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பேருந்து நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டது.
மதுரையின் நினைவுகள் - அழகியல் முன்னெடுப்பு
175 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமாக இதன் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. 57 பேருந்துகள் நிறுத்தும் அளவில் பேருந்து நிலையமும்,
450 கடைகள் இயங்கும்படி வணிக வளாகமும் கட்டப்பட்டுவருகின்றன.
பேருந்து நிலையத்தின் தரைத்தளத்தின் கீழே இரண்டு அடுக்குகளில் 5000 இருசக்கர வாகனங்களும், 350 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. மேலும், பயணிகள் காத்திருப்புப் பகுதி, லிஃப்ட், நகரும் படிக்கட்டுகள், சுரங்கப்பாதை ஆகியவையும் கட்டப்படுகின்றன.
இந்தப் பேருந்து நிலையத்திற்குக் கூடுதல் அழகு சேர்க்கும்விதமாக வளாக சுவர்கள் முழுவதும் மதுரையின் நினைவுகளையும், பெருமைகளையும் போற்றும்வகையில் ஒரு அழகியல் முன்னெடுப்பை 'India media house' என்ற நிறுவனத்தின் மூலமாக மதுரை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
மாமதுரை போற்றுவோம்
மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆலோசனையின்படி பெரியார் பேருந்து நிலைய கட்டடங்களில் பிரமாண்ட தமிழி எழுத்துகளும், 'மாமதுரை போற்றுவோம்' என்ற தலைப்பில் கண்கவர் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும்விதமாக நாட்டார் தெய்வங்களின் படங்கள், நாட்டுப்புற கலைகளின் படங்கள் வண்ண ஓவியங்களாகப் படைக்கப்பட்டுள்ளன.
இது தவிர, சுமார் 70 ஆண்டுகளுக்கு முந்தைய பெரியார் பேருந்து நிலைய படமும், மதுரையின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்ட பேருந்துகளின் படங்களும், அதில் பயணம் செய்த மக்களின் படங்களும் ஒளிரும் படங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பெரியாருடன் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை, காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோர் உள்ள படங்களும், மதுரையின் சுற்றுலாத் தலங்களான திருமலை நாயக்கர் அரண்மனை உள்ளிட்ட இடங்களும், பண்பாட்டு அடையாளங்களான சித்திரைத் திருவிழா, ஜல்லிக்கட்டு போட்டிகளின் படங்களும் ஒளிரும் படங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் பயன்பாட்டிற்காக... ஸ்டாலின் திறந்துவைப்பு
இந்தப் பேருந்து நிலையத்தில் 55 கோடி ரூபாய் மதிப்பிலான பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பகுதியினை மட்டும் இன்று காலை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஸ்டாலின் திறந்துவைத்தார். அத்துடன், பெரியார் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தையும், ஜான்சி ராணி பூங்காவில் தொல்பொருள் அங்காடிகள் அமைக்கும் கட்டடத்தையும் பயன்பாட்டிற்குத் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கட்டு கமிஷனை... வெட்டு முன்பணம் 30 ஆயிரத்தை - பிடிஓவுக்கு கைப்பூட்டு!