மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டிலும் கரோனா தொற்றின் பரவல் அதிதீவிரமாக அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில் நடுத்தரக் குடும்பத்தினரும், ஏழை, எளிய மக்களும் மருந்துகள், ஆக்ஸிஜன் ஆகியவற்றுக்குச் செலவு செய்வதற்குப் போதிய பணம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இஎஸ்ஐ மருத்துவமனைகள், ரயில்வே, ராணுவ மருத்துவமனைகள், மத்திய நிறுவனங்களுக்குச் சொந்தமான மருத்துவமனைகள் உள்ளன.
அதைச்சார்ந்த அனைத்து மருத்துவமனைகளையும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்கினால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பணியிலிருக்கும் நபர்களின் வருமானத்திலிருந்து ஒரு சிறிய தொகை பிடித்தம் செய்து அதன் மூலமாகவே இஎஸ்ஐ மருத்துவமனைகள் செயல்படுகின்றன. ஆனால், தற்போது வரை மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இதில் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
எனவே, இஎஸ்ஐ மருத்துவமனைகள், ரயில்வே, ராணுவ மருத்துவமனைகள், மத்திய நிறுவனங்களுக்குச் சொந்தமான மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்கவும், அங்கு முறையான படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி, ஆம்புலென்ஸ் வசதி ஆகியவை செய்து தர உத்தரவிட வேண்டும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்காக மாற்றப்பட்டது. அதன்படி, இன்று (மே 13) இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வுமுன் விசாரணைக்கு காணொலி வாயிலாக வந்தது. அப்போது, "இஎஸ்ஐ மருத்துவமனைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்திய முழுக்கவே இஎஸ்ஐ மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை அனுமதிக்கலாமே?" எனக் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து இது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுப்பதாகவும், இதனை உற்றுநோக்குவதோடு, இந்த வழக்கு குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். அதன்பின்னர், இந்த வழக்கின் விசாரணையை மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: என்னை சந்திக்க வேண்டாம் : பழனிவேல் தியாகராஜன்