மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் சேர்ந்த முஹம்மது நாசர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "சிவகங்கை மாவட்டத்தில் இளையாங்குடி பேரூராட்சி அமைந்துள்ளது. இதனைச் சுற்றி கோயில்கள், பள்ளிகள், நீதிமன்றம், தபால் நிலையம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது.
இளையாங்குடி பேருந்து நிலையம் பேரூராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் இளையாங்குடி பகுதியைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் அச்சமின்றி பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இளையான்குடி பேரூராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் தற்போது உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ளது.
இதன் அருகே டாஸ்மார்க் மற்றும் சுடுகாடு அமைந்துள்ளது. மேலும் புதிய பேருந்து நிலையம் அமைந்தால் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பேருந்துகள் இளையான்குடி பேரூராட்சி நடுவே அமைந்துள்ள பழைய பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படாது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
மேலும், இளையான்குடி பேரூராட்சி நடுவே அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் பழைய பேரூராட்சி கட்டிடம் இடியும் நிலையில் அமைந்துள்ளது. அதனை இடித்து பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்த மனு அளிக்கப்பட்டது.
எனவே, இளையாங்குடி பேரூராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கவும், இளையான்குடி பேரூராட்சி நடுவே தற்போது அமைந்துள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், கிருஷ்ணன்ராமசாமி அமர்வு முன்பு நேற்று (மே.11) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு