மதுரை: யாகப்பா நகரைச் சேர்ந்த இருளாண்டி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை தடுத்து சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், கழிவை அகற்றும் பணியின் போது ஏற்படும் மனித மரணங்கள் தொடர்ந்து கொண்டே போகிறது. இந்த விவகாரத்தில் அரசின் உத்தரவை அரசே மதிக்காத நிலை உள்ளது. இழப்பீடு வழங்கும் உத்தரவும் முறையாக பின்பற்றப்படவில்லை.
தூய்மை இந்தியா திட்டத்திற்காக 2018-19 ஆம் ஆண்டில் மட்டும் 15 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு உள்ளாட்சிகளில் 35 ஆயிரம் பேர் துப்புரவு பணியாளர்கள் உள்ளனர்.
எனவே, தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் நலன் கருதி, மனிதக்கழிவை மனிதனே அகற்றுவதைத் தடுப்பது தொடர்பான சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரர் பாதிக்கப்பட்டவர் அல்ல, அவ்வாறு இருக்கையில் அவர் தற்போதைய அறிக்கையைக் கோர இயலாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கச்சநத்தம் படுகொலை வழக்கு: 27 பேர் குற்றவாளிகள் - சிவகங்கை நீதிமன்றம்