மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், ”ஒவ்வொரு முறையும் திராவிட இயக்கங்களுக்கு மாற்று எனக்கூறி மூன்றாவது அணி அமைவது போலவே நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் அணி அமைத்து போட்டியிட நினைக்கிறது. தேமுதிகவிற்கான பழைய அடிப்படை கட்டமைப்பு தற்போது இல்லை.
கூட்டணி பலத்தை மட்டுமே நம்பி பாஜக தேர்தலை சந்திக்கிறது. தமிழக மக்கள் நிச்சயம் அக்கட்சியை நிராகரிப்பார்கள். அவர்கள் முன்வைக்கும் இந்தி, இந்துத்துவா கொள்கைகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போன்று வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய தோல்வியை பாஜக சந்திக்கும். அதேபோன்று திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.
உலக நாடுகள் அனைத்திலும் ஒரே விதமான ஜிஎஸ்டி வரி விதிப்பு தான் உள்ளது. ஆனால், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் 20 விதமான ஜிஎஸ்டி வரி விதிப்பு தற்போது நடைமுறையில் உள்ளது. பழைய வரி பாக்கிகளை வசூலிக்க இலக்கு வைத்து மத்திய அரசு செயல்படுவது மிகவும் தவறு. வரி மேல் வரி போட்டு மக்களைக் கசக்கிப் பிழிய முயற்சிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாளை இறுதிசெய்யப்படுகிறது அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு? அமித் ஷா, நட்டா தமிழ்நாடு வருகை