மதுரை, தல்லாகுளம் அவுட் போஸ்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, அம்பேத்கர் பிறந்த நாளில் மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.
எல். முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
இதைக் கண்டிக்கும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பாஜகவினர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், "அம்பேத்கர் பிறந்த நாளுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அம்பேத்கரை ஒரு சாதித் தலைவராக அடையாளப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
அம்பேத்கரை பெருமைப்படுத்திய மத்திய அரசு
பாஜக தலைமையிலான மத்திய அரசு அம்பேத்கரை பெருமைப்படுத்தியுள்ளது. அம்பேத்கர் ஒரு தேசியத் தலைவர். சாதித் தலைவர் அல்ல, அம்பேத்கர் புகழை பாஜக உலகம் முழுதும் எடுத்துச் செல்கிறது. மதுரையில் விசிகவினர், பாஜகவினர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திருமாவளவன் சாதி அரசியலை கையில் எடுத்துள்ளார்
திருமாவளவன் சாதி அரசியலைக் கையில் எடுத்துள்ளார். அரக்கோணம் இரட்டைக் கொலை என்பது இரண்டு நண்பர்களுக்கிடையிலான மோதலாகும். கரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அரக்கோணம் விவகாரத்தை வைத்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழ்நாட்டில் சாதி மோதலை உண்டாக்குகின்றன. திருமாவளவன் அடிப்படை அரசியலை விட்டு சாதி அரசியலைக் கையில் எடுத்துள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: 'கிரிஜா வைத்தியநாதன் வழக்கு ஏப். 19-க்கு ஒத்திவைப்பு'