மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளேன் இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மொத்தம் உள்ள 105 சாட்சிகளில் 30 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 20 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப் பட்டுள்ளேன். இவ்வளவு நீண்ட விசாரணை முடியும் வரை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. ஆகவே எனக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும். ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படுவேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 4) நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், ஜாமீன் வழங்கக்கூடாது. இவர் வெளியே சென்றால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அணுகலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கோயிலுக்குள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்: உயர் நீதிமன்றக்கிளை