தற்போது ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில் தெருவோரத்தில் வாழ்கின்ற நாய்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் உத்தரவின்பேரில் கால்நடை வளர்ப்பு துறை இணை இயக்குனர் அலுவலகத்தின் மூலமாக தன்னார்வலர்களை கொண்ட குழுவினர் தெரு நாய்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
இக்குழுவில் கால்நடை வளர்ப்பு இணை இயக்குனர் தலைமையில் எட்டு அலுவலர்கள் 500 கிலோ அரிசியைக் கொண்டு அடுத்த 14 நாட்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையைப் பொறுத்து இந்த அளவு அதிகரிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட தெரு நாய்களுக்கு 25 கிலோ அரிசி வகைகள், அருகிலுள்ள பராமரிப்பு செய்யும் குடும்பங்களின் மூலமாக வழங்கப்படும். மேலும் கூடுதலாக கால்நடை வளர்ப்பு இணை இயக்குனர் அலுவலகத்தை சுற்றியுள்ள 100 நாய்களுக்கு தயிர் சாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், இந்நடவடிக்கை தனது நேரடி கண்காணிப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.