வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், மதுவுக்கு எதிராக போராடிவரும் மது ஒழிப்புப் போராளி நந்தினி தனது அடுத்தகட்டப் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி வேலூரில் உள்ள மக்களை வீடுவீடாகச் சென்று நேரில் சந்தித்து மதுவுக்கு எதிராக அனைவரையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் பரப்புரை செய்ய இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்கள் மூலம் காணொலி வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில், மதுவினால்தான் தமிழ்நாட்டில் 70 முதல் 80 விழுக்காடு இளைஞர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் இருப்பதாகவும், தானும் தன் தந்தையும் சிறையில் இருந்த 13 நாட்கள் புதிய அனுபவத்தைக் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிணை பெற்று வெளியே வந்த நந்தினி, குணா என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் திருமணம் முடிந்த மறுநாளே அடுத்தப் போராட்டம் பற்றி காணொலி வெளியிட்டு என்ன செய்தாலும் மதுவுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்.