மதுரை: சென்னையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச்சட்டம் (ஆர்டிஐ) ஆர்வலர் காசிமாயன், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் சீர்மிகு நகரம் திட்டம் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டிருந்தார்.
இந்தத் தகவலின் அடிப்படையில் சீர்மிகு நகரம் திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள 10 மாநகராட்சிகளிலும் இதுவரை 4,793.62 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது எனவும், இதில் மத்திய அரசு 2,307.63 கோடி ரூபாயும், மாநில அரசு இரண்டாயிரத்து 486 கோடி ரூபாயும் செலவுசெய்துள்ளன.
எந்தெந்த மாநகராட்சிக்கு எவ்வளவு?
சீர்மிகு நகரம் திட்டத்திற்காக...
- கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு ரூ. 772 கோடி
- ஈரோடு மாநகராட்சிக்கு ரூ. 379 கோடி
- மதுரை மாநகராட்சிக்கு ரூ. 579 கோடி
- சேலம் மாநகராட்சிக்கு ரூ. 479 கோடி
- தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ரூ. 386 கோடி
- தூத்துக்குடி மாநகராட்சிக்கு ரூ. 386 கோடி
- திருச்சி மாநகராட்சிக்கு ரூ. 386 கோடி
- திருநெல்வேலி மாநகராட்சிக்கு ரூ. 373.81 கோடி
- திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ. 379 கோடி
- வேலூர் மாநகராட்சிக்கு ரூ. 373.81 கோடி
எனச் செலவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐயில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஆர்டிஐ ஆர்வலர் காசிமாயன் கூறுகையில், "சீர்மிகு நகரம் திட்டத்தில் 10 மாநகராட்சிகளுக்கு மொத்தம் ரூ. 4,793.62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
இதில், மத்திய அரசு நிதி ரூ. 2,307.63 கோடி, மாநில அரசு நிதி ரூ. 2,486 கோடி ஆகும். இத்திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் புகார் குறித்த தகவலுக்கு அலுவலர்கள் மழுப்பலான பதில் அளித்துள்ளனர்" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.