பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை 8 சுற்றுகளாக நடைபெற்றது. இப்போட்டியில் 719 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களம் கண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து மாடுபிடி வீரர்களை சிதறடித்து காளைகளே அதிகளவில் வெற்றி ஆதிக்கம் செலுத்தியது.
போட்டியில் 12 காளைகளை பிடித்த மதுரை கிடாரிபட்டியை சேர்ந்த கண்ணன் என்ற வீரருக்கு ஒரு காரும், களத்தில் சிறப்பாக விளையாடிய குருவித்துறையை சேர்ந்த சந்தோஷ் என்பவரின் காளைக்கு ஒரு காரும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் விரைவில் வழங்கவுள்ளனர். 2 ஆவது இடம்பிடித்த மாடுபிடி வீரரான 9 காளைகளை அடக்கிய அரிட்டாபட்டியை சேர்ந்த கருப்பணனுக்கு பைக் பரிசும், மூன்றாவது இடம் பிடித்த மாடுபிடி வீரரான அலங்காநல்லூரை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு தங்கக் காசும் வழங்கப்பட்டன.
இதேபோல் சிறந்த காளையாக இரண்டாம் இடம் பிடித்த மேலமடையை சேர்ந்த அருணின் காளைக்கு பைக்கும், 3 ஆவது சிறந்த காளையான சரந்தாங்கி மீசைக்காரரின் காளைக்கு தங்கக்காசும் வழங்கப்பட்டன. மேலும் சுற்றுகள் வாரியாக வெற்றி பெற்ற காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயம், பீரோ, கட்டில், உள்ளிட்ட ஏராளமான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
மாடு முட்டியதில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், காவல்துறையினர் என 50 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் போட்டியை உற்சாக பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளையர்களுக்கு தண்ணீர் காட்டிய அமைச்சரின் காளை!