மதுரை: இன்று காணும் பொங்கலை முன்னிட்டு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை மாவட்ட ஆட்சியர் தலைமையில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம், சரவணன், மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் உள்பட விழா கமிட்டியினர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஜல்லிக்கட்டு, சுற்று ஒன்றுக்கு 75 பேர் வீதம், 8 சுற்றுக்களாக நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வாடிவாசல் வழியில் சீறிப்பாய 800 காளைகளும், அதனை அடக்கியாள 655 வீரர்களும் களத்தில் உள்ளனர். போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கும் வீரர்களுக்கும், இரண்டு கார்கள், நாட்டு பசு உள்பட கண்ணைக் கவரும் பரிசுகள் காத்திருக்கின்றன.
போட்டிக்கு கரோனா பரிசோதனை செய்த சான்றிழ்களோடு வரும் வீரர்கள் இறுதி பரிசோதனை செய்து களத்திற்கு வீரர்கள் அனுப்ப படுகின்றனர். மாடுபிடி வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தே போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடை உதவி இயக்குநர் திருவள்ளுவன், கால்நடை மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் முன்னிலையில் காளைகளுக்கு இறுதிக்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு களத்திற்கு அனுப்பப்படுகிறது. சிறந்த மாடுபிடி வீரர், களத்தில் நின்று விளையாடும் மாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் பெயர்களில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
பார்வையாளர்களுக்கு இருபுறமும் வேலிகள் அமைத்து காளைகள் உள்ளே நுழையாமல் பாதுகாப்பு வசதிகள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி என அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை, பேரூராட்சி துறை, மின்வாரிய துறை, வருவாய்துறை என அனைத்து துறை அலுவலர்களும் விரைவாக செயல்பட்டு வருகின்றனர். முதலமைச்சர், துணை முதலமைச்சரின் வருகையால் தென்மண்டல ஐஜி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் என மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தொடர் மழை எதிரொலி: கூலமேடு ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு