மதுரை: Alanganallur Jallikattu: அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவில் 21 காளைகளைப் பிடித்த கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தைத் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றன. கரோனா பெருந்தொற்று காரணமாகப் பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டிகள் நடைபெற்றன.
காலை 7 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டுப்போட்டிகள் 8 சுற்றுகள் ஆக நடைபெற்றன. மொத்தம் 1,020 காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டன.
மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசு
இந்தப் போட்டியில் 21 காளைகளைப் பிடித்த மதுரை - கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.
19 காளைகளைப் பிடித்து இரண்டாமிடம் பெற்ற அலங்காநல்லூர் ராம்குமாருக்கு மோட்டார் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
13 காளைகளைப் பிடித்து 3ஆம் இடம் பெற்ற சித்தாலங்குடி கோபாலகிருஷ்ணனுக்கும் மோட்டார் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசு
புதுக்கோட்டை தைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் காளைக்கு சிறந்த காளைக்கான முதலிடத்தைப் பெற்றது.
சேப்பாக்கம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக, கார் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை திருமங்கலம் சட்டப்பேரவைத்தொகுதியின் முன்னாள் உறுப்பினர் முத்துராமலிங்கத்தின் காளை இரண்டாவது பரிசை வென்றது. மதுரை மாவட்டம் குலமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருப்பதியின் காளை மூன்றாவது பரிசை பெற்றது.
கடந்தாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முதல் பரிசு குழப்பம் காரணமாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் அடிப்படையில் வழக்குத் தொடுத்த மாடுபிடி வீரர், மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியைச் சேர்ந்த கருப்பணன் முதல் பரிசுக்குரியவராகத் தேர்வு செய்யப்பட்டார் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்தார்.
இதையும் படிங்க: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!