மதுரை ஆவின் கூட்டுறவு நாணய சங்கத்தில் கடந்த 2017-18 ஆண்டுகளில் ஊழியர்கள் வைப்பு நிதியிலிருந்து ரூ.7.92 கோடி கையாடல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கூட்டுறவு பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் செயலாளர் மதலையப்பன், கணக்காளர் ஜெகதீசன் ஆகியோர் வணிக குற்றப்புலனாய்த்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வணிக குற்றப்புலனாய்த்துறையினர் இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள சங்கத்தின் தலைவர் பாண்டி உள்ளிட்ட இரண்டு பேரை தேடி வந்தனர். இந்த நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு பால் முகவர்கள் சங்கம் கடிதம் அனுப்பியது.
அந்தக் கடிதத்தில் முக்கிய குற்றவாளிகளான அச்சங்கத்தின் தலைவர் பாண்டி, துணைத் தலைவர் பரமானந்தம் ஆகியோர் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர்களது ஆதரவாளர்களாக இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தியிருந்தது.
இந்த நிலையில், மதுரை பால் திட்ட பணியாளர்கள், கூட்டுறவு சிக்கன நாணய சங்க தலைவர் பாண்டி, துணைத்தலைவர் பரமானந்தம் ஆகியோரை இணைப்பதிவாளர் சதீஷ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மதுரை ஆவின் முறைகேடு: முக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சருக்கு கடிதம்!